பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் குடும்ப பிணைப்பு மற்றும் சமூக கட்டமைப்பை சீர்குலைக்க சதி செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று(29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் சிறுவர்களைத் தண்டிப்பதனைத் தடை செய்யும் சட்டமூலம் ஒன்றை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஓரினச் சேர்க்கை
அதன் மூலம் பிள்ளைகளை ஒழுக்கமான, நன்னடத்தை கொண்டவர்களாக வளர்த்தெடுக்கும் சூழலை இல்லாதொழிப்பது அவர்களின் நோக்கமாகும்.
அவ்வாறான நிலையில், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான குடும்ப பிணைப்பு சீர்குலைந்து, மாணவர் - ஆசிரியர் இடையிலான பந்தம் அறுந்து உளரீதியாக பலவீனமான சமூகமொன்று உருவாக வாய்ப்புண்டாகும். சமூக கட்டமைப்பும் சீர்குலையும்.
அத்துடன் புதிய சட்டமூலத்தின் பிரகாரம் 16 வயதினில் பிள்ளைகள் தவறான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளித்தல் மற்றும் ஓரினச் சேர்க்கை விடயங்களை பிரசாரப்படுத்தல் மூலம் பிள்ளைகள் துர்நடத்தை மற்றும் மதுபோதைக்கு அடிமையாகும் சூழல் உருவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட மேற்கத்தேய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை வெறுக்கும் மனோபாவம், அவர்களுக்கு எதிரான சிந்தனைப் போக்கு உருவாகிக் கொண்டிருக்கையில் இங்கு அதனை பிரபல்யப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றார்கள்.
கல்விக் கொள்கை
சிறுவர்களுக்கு ஏதேனும் உடல்ரீதியான தண்டனைகள் கொடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தற்போதைய சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
புதிய சட்டங்கள் தேவையில்லை. தேவையேற்பட்டால் சிறுவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒம்புட்ஸ்மன் ஒருவரை ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் நியமிக்கலாம்.
தற்போதைய கல்விக் கொள்கை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் முறையைக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே பிள்ளைகள் மன அழுத்தங்களுக்கு ஆளாகி பாதிக்கப்படுகின்றார்கள்.
அவர்களுக்கு நன்மை செய்ய நாடினால் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் புதிய சட்டங்கள் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.