உள்ளக, கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள்!- உறுப்பு நாடுகளுக்கு கடிதம். [Thursday 2025-09-11 07:00] |
![]() உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், வேண்டுகோள்விடுத்துள்ளன |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் தகவல் நடுவம், தமிழ் ஆய்வு நிலையம், இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் இளையோர் அமைப்பு, சர்வதேச ஈழத்தமிழர் பேரவை, கனேடியத் தமிழ்த்தேசிய அவை, உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிலும் இயங்கிவரும் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளுக்குக் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏதுவான பலதரப்பட்ட வழிமுறைகள் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் எனவும் அக்கடிதத்தில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை தமிழ்மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படுவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்கும் வழிகோலும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், உள்ளகப்பொறிமுறையை நிராகரிக்குமாறும், இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. |
-
11 செப்., 2025
www.pungudutivuswiss.com