தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்கள்! ![]() [Friday 2025-09-26 17:00] |
![]() “தியாக தீபம்” திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது |
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (26) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக, இன்றைய தினம் திலீபன் பிறந்த இடத்திலிருந்து இரு நினைவு ஊர்திகள் யாழ். பலாலி வீதியூடாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது. அதேவேளை, அவ்வழித்தடத்தில் யாழ். உரும்பிராயில் உள்ள, விடுதலைப் போராட்டத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த பொன் சிவகுமாரின் திருவுருவச் சிலைக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ். நல்லூர் நோக்கி பயணிக்கும் இரு ஊர்திகளுக்கும் மக்கள் வீதியோரங்களில் நின்று அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜா காண்டீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அந்த ஊர்திகள் இரண்டும் தியாகி திலீபனின் நினைவிடத்தை அடைந்ததையடுத்து, அங்கு குழுமியிருந்த மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலர் தூக்கு காவடியும் எடுத்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். திலீபனின் நினைவிடத்தில், அவரது உயிர் பிரிந்த 10.48 மணிக்கு மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வுகளில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநகர சபை, பிரதேச சபை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும், நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சிக் கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் இன்று (26) வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியடியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் - வேலணை யாழ்ப்பாணம், வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தினத்தின் இறுதிநாள் நினைவேந்தல் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்களாவடியில் உள்ள பொது நினைவுத் தூபியடியில் இன்று காலை 8.30 மணி முதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வேலணை மக்களால் திலீபன் நினைவுகூரப்பட்டார். இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு முன்னாள் போராளியால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேலணை பிரதேச சபையின் தவிசாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், மாநகரின் முன்னாள் உறுப்பினர் பார்த்தீபன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மகன் கலை அமுதன், வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் வசந்தகுமாரன், உறுப்பினர்களான பிரகலாதன், கார்த்தீபன், நாவலன், ஞானரூபன் உட்பட நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தலுக்கு வருகை தந்தவர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பருத்தித்துறை திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று காலை 8 மணி முதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சைவ மதகுருக்கள், பருத்தித்துறை மௌலவி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தினர். திருகோணமலை தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல் இன்று திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது. இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். திருகோணமலை - குளக்கோட்டன் மண்டபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நினைவுப் பேருரைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர். கொழும்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு இன்று இறுதிநாள் அஞ்சலியினை செலுத்தினார். மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “தியாக தீபம்” திலீபனின் 38ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று (26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது திலீபனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த “தியாக தீபம்” திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் “தியாக தீபம்” திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவு உரைகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு “தியாக தீபம்” திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26) காலை புதுக்குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி, திலீபனுக்கான அஞ்சலி மரியாதையினை செலுத்தியிருந்தனர். நினைவேந்தல் நிகழ்வின்போது பொதுச்சுடரினை சட்டத்தரணி தனஞ்சயன் ஏற்றிவைக்க, தொடர்ந்து திலீபனின் திருவுருவப்படத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், நினைவுரையும் நடத்தப்பட்டது. மட்டக்களப்பு ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் வெள்ளிக்கிழமை (26) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக் கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திலீபனின் திருவுருவப்படத்துக்கு முன்னாள் போராளி ஒருவர் மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ![]() ![]() ![]() ![]() ![]() |
-
27 செப்., 2025
www.pungudutivuswiss.com