பேச்சுவார்த்தைகள் செவ்வாய்க்கிழமையும் தொடரவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முதல் நாள் நடைபெற்ற கூட்டம் “நேர்மறையானது” எனவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து ஒரு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் பிரதிநிதிகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான காசா குண்டுவீச்சுகள் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஹமாஸ் தலைவர்கள் கலீல் அல்–ஹய்யா மற்றும் ஸாஹிர் ஜபரின் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த மாதம் தோஹாவில் இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதல்களில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் பேச்சுவார்த்தைகள் கைதிகள் பரிமாற்றம், போர்நிறுத்தம், காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் அனுமதி ஆகியவை குறித்தே மையப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இஸ்ரேல் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலஸ்தீன அரசியல் கைதிகள் ஆகியோரின் பட்டியல் குறித்து தொழில்நுட்ப குழுக்கள் தற்போது பணிபுரிந்து வருகின்றன. முதற்கட்ட சிறைமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், டிரம்ப் முன்வைத்த சமாதான திட்டத்தின் மற்ற அம்சங்களும் வேகமாக நகரும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லீவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
ஒரு நல்ல ஒப்பந்தம் நடப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. ஹமாஸ் முக்கியமான விஷயங்களில் இணக்கம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை டிரம்பின் நெருங்கியவர் ஸ்டீவ் விட்காஃப் வழிநடத்தி வருகிறார். அதில் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரும் இடம்பெற்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நாளான செவ்வாய்க்கிழமை, 2023 அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய இஸ்ரேல் தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகள் நிறைவாகும். அந்த தாக்குதலில் 1,139 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 200 பேர் கடத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் படையெடுப்பில் இதுவரை 67,160க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் 1.69 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா. விசாரணை ஆணையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், திங்கட்கிழமையன்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலும், இஸ்ரேல் படைகள் காசாவின் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக அல் ஜசீரா செய்தி தெரிவித்துள்ளது.