இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான 60/L.1/Rev.1 தீர்மானம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (6) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் திருத்தப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. குறித்த புதுப்பிக்கப்பட்ட வரைவு கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தின் முக்கிய அனுசரணையாளர்களாக பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. மிகக் குறுகிய காலத்திற்குள், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்து அரசாங்கம் தொடர்ச்சியான உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் தனது சொந்த மக்களின் உரிமைகளை முன்னேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்திற்கு கடந்த 4 வருடங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதனால் இலங்கை மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதை உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலும் தௌிவாகின்றது. இதன் அதிகாரத்தை நீடிப்பதால் இலங்கையில் உள்ள சமூகங்கள் பிளவுபடுவதற்கும் சுயநலன்களுக்குமான வாய்ப்பை உருவாக்கும். அதேபோன்று ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது |