ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, நேற்று திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்போது புதிய பிரேரணை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உரையாற்றிய சைப்பிரஸ் நாட்டின் பிரதிநிதி, கடந்த 12 மாதகாலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முன்னேற்றகரமான மறுசீரமைப்புக்களை வரவேற்பதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று நிலையான பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்த அவர், பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பிரஸ்தாபித்த அவர், நிலையான நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது மிக அவசியம் என்றார். |