இலங்கை அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, 2025 அக்டோபர் 15ஆம் திகதி முதல் நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் பயணத்திற்கு முன் இலத்திரனியல் பயண அனுமதி “Electronic Travel Authorisation (ETA)” அனுமதி பெறுவது கட்டாயம்.
இது நாட்டின் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும், நுழைவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வகை செய்யப்படுவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது, முன்கூட்டியே ETA விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு புள்ளிகளில் நேரம் வீணாகாமல், பயணிகளுக்கான நுழைவு சீராக நடைபெறும்.
பயணிகளும் வணிக நோக்கில் வருபவர்களும் தங்கள் ETA விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் www.eta.gov.lk மூலம் விமானத்தில் ஏறும் முன்பே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியா வெளிநாட்டு குடிமக்களுக்காக 2025 அக்டோபர் 1ஆம் திகதி முதல் “Digital Arrival Card” என்ற புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைப்படி, வெளிநாட்டு பயணிகள் தங்களின் வருகை விவரங்களை (Disembarkation Card) வருகைக்கு முன் 72 மணிநேரத்திற்குள் ஆன்லைனில் பூர்த்தி செய்யவோ அல்லது நாட்டிற்கு வந்த பிறகு கையால் நிரப்பவோ முடியும்.
டிஜிட்டல் விண்ணப்பம் பின்வரும் வழிகளின் மூலம் செய்யலாம்:
- இந்திய விசா அதிகாரப்பூர்வ இணையதளம்
- Indian Visa Su-Swagatam மொபைல் செயலி
- விமான நிறுவனங்கள் வழங்கும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது
இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, காகித வடிவப் படிவங்கள் இன்னும் ஆறு மாதங்கள் வரை கிடைக்கும், அதன் பிறகு முழுமையாக டிஜிட்டல் முறைமைக்கு மாறப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தி, டிஜிட்டல் குடிவரவு முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.