-

18 நவ., 2025

மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு மக்காவுக்குச் சென்ற 42 இந்தியர்கள் பஸ் விபத்தில் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து சவூதி அரேபியாவின் மக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பஸ், மக்காவிலிருந்து மெதீனாவுக்கு செல்லும் வழியில் முப்ரிஹத் பகுதியில் டீசல் லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்ததில், பஸ்ஸில் இருந்த 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை (17) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புனித யாத்திரையில் ஈடுபட்ட இந்தியர்கள் அனைவரும் மக்கா நகருக்கு சென்று, உம்ரா கடமைகளை நிறைவு செய்துகொண்டு, மெதீனாவுக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோதே டீசல் ஏற்றிச் சென்ற லொறி மீது மோதி விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்துள்ளது.
அந்த பஸ்ஸில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பஸ்ஸில் பயணித்த 43 பேரில் 42 பேர் உயிரிழக்க, 24 வயதுடைய இளைஞர் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மேலதிக தகவல் கிடைத்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதற்காக சவூதி அரேபியா அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து செயற்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பாகவும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றிய விபரங்களையும் அறிந்துகொள்ள 79979-59754 அல்லது 99129-19545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ad

ad