-

21 டிச., 2025

விவசாய நவீநமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்! [Sunday 2025-12-21 06:00]

www.pungudutivuswiss.com



உலகவங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீநமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

உலகவங்கியின் நிதி உதவியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீநமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மக்களால் தம்மிடம் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விவசாய நவீனமயமாக்கல் திட்டம் தொடர்பான விபரங்களை வழங்குமாறு விவசாயத் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

முல்லைத்தீவு - துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகவங்கியின் நிதி உதவியில் விவசாய நவீநமயமாக்கல் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக அறிகின்றோம். இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மாதுளைச் செய்கையும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாழைச்செய்கையும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பப்பாசி மற்றும் நிலக்கடலைச் செய்கையும், மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் பேஷன்ஃப்ரூட் செய்கையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

அந்தவகையில் வெளிநாட்டு ஏற்றுமதி நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிவதுடன், இத்திட்டத்திற்கு ஒரு பயனாளிக்கு ஒருமில்லியன் வரையான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.

அத்தோடு ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பாரிய நிதிச்செலவில் இத்திட்டத்திற்கு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய நிதிச்செலவில் இத்திட்டத்திற்கென உபகரணங்களும் பெறுப்பட்டுள்ளன.

அத்தகையசூழலில் இவ்வாறு உலகவங்கியின் நிதி உதவியில் செயற்படுத்தப்பட்ட இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பலரும் என்னிடம் முறையீடுசெய்துள்ளனர்.

குறிப்பாக இந்த விவசாயநவீன மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்ட கரைதுறைப்பற்றின் கொக்குத்தொடுவாய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பழம்பாசிப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மாதுளைச் செய்கையிலும் பாரிய குழறுபடிகள் இருப்பதாகவே என்னிடம் பலரும் முறையிட்டனர்.

மக்களுக்கு உரிய வகையில் உள்ளீடுகள் வழங்கப்படவில்லை எனவும், இத்திட்டத்தின் பிரகாரம் அப்பகுதியில் இரு கட்டடங்கள் அமைக்கப்படவேண்டிய நிலையில் ஒருகட்டடம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதுடன், இருகட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக உரிய தரப்பினரின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். குறித்த மாதுளைச் செய்கைத்திட்டம் செயற்பாடற்று தோல்வியடைந்த நிலையில் காணப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

அதேவேளை பழம்பாசிப் பகுதியில் இத்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட பப்பாசி செய்கையிலும் முறைகேடுகள் இருப்பதாகவே அறியமுடிகின்றது. குறிப்பாக செய்கைக்காக வழங்கப்படுகின்ற விதைப் பைக்கட்டுக்களில் விதைதொடர்பான தெளிவான விபரங்கள் வழங்கப்படவில்லை.

அத்தோடு பப்பாசித்திட்டத்திற்கென பாரிய நிதிச்செலவில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாடற்று சீரற்றநிலையில் காணப்படுவதுடன், பாரிய நிதிச்செலவில் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் களஞ்சிய அறைகளில் மூடிவைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதனையும் அவதானிக்கமுடிகின்றது.

இந்த விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பின், இதுதொடர்பில் ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவேண்டும். அதன்மூலம் இதுதொடர்பான முறையான விசாரணைகளை மேற்கொண்டு, ஊழலில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

எனவே இத்திட்டம் தொடர்பான சகல விபரங்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்ளவிரும்புகின்றேன். விவசாயத் திணைக்களத்திடம் இத்திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களையும், தரவுகளையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

இந்நிலையில் உதவி மாகாண விவசாயப் பணிப்பாளர் பதிலளிக்கையில், விவசாயத்திணைக்களம் இந்த விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை மாத்திரமே வழங்கியது. இதுதவிர இந்தத் திட்டத்திற்கும் விவசாயத் திணைக்களத்திற்கும் வேறெந்தத் தொடர்புகளும் கிடையாது.

எனினும் இத்திட்டத்திற்கு எத்தனைபேர் உள்வாங்கப்பட்டனர் என்பதுதொடர்பான விபரங்களையும், தற்போது எத்தனைபேர் இந்த செய்கைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதொடர்பான விபரங்களையும் எம்மால் தரமுடியும் என்றார்.

ad

ad