
தமிழக அரசியலில் ஒரு பக்கம் கூட்
டணிக் கணக்குகள் சூடுபிடித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் கட்சித் தாவல்களும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆரம்பகால ஆதரவாளரும் நடிகருமான தாடி பாலாஜி, அக்கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, ஜோஸ் சார்லஸ் தலைமையிலான ‘லட்சிய ஜனநாயக கட்சி’யில் இணைந்துள்ளார். நடிகர் விஜய்யின் தீவிர விசுவாசியாக, தனது நெஞ்சில் விஜய்யின் உருவத்தைப் பச்சைக்குத்தும் அளவிற்குத் தீவிரமாக இருந்த பாலாஜியின் இந்த அரசியல் மாற்றம், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியைத் தளமாகக் கொண்டு ‘ஜேசிஎம்’ (JCM) என்ற அமைப்பை நடத்தி வந்தார். கடந்த வாரம் அவர் தனது புதிய அரசியல் பயணமாக ‘லட்சிய ஜனநாயக கட்சி’யைத் தொடங்கினார். கட்சி அலுவலகத்திற்கு வந்த தாடி பாலாஜியை, ஜோஸ் சார்லஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். தவெக-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகத் தொடக்கத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது தாடி பாலாஜி இக்கட்சியில் இணைந்திருப்பது ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
இந்த வெளியேற்றத்தின் பின்னணியில் தாடி பாலாஜியின் நீண்ட கால விரக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெக தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அதில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், மேடைகளிலும் ஊடகங்களிலும் விஜய்க்கு ஆதரவாகப் பலமாகப் பேசி வந்தார். இருப்பினும், அவருக்குக் கட்சியில் எந்தவிதமான பொறுப்புகளோ அல்லது முக்கியத்துவமோ வழங்கப்படவில்லை என்ற மனக்கசப்பு நிலவியது. “உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இல்லை” என்ற ஆதங்கத்தில் இருந்த அவர், ஒருகட்டத்தில் தவெக தலைமையையே விமர்சிக்கத் தொடங்கி, தற்போது முற்றிலுமாக விலகியுள்ளார்.
மறுபுறம், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் அண்மையில் விஜய்யின் தலைமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். “விஜய்யுடன் இருப்பவர்கள் மற்றும் அவரை வழிநடத்துபவர்கள் சரியில்லை” என்று குறிப்பிட்டிருந்த அவர், தவெக-வுடன் கூட்டணி வைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இத்தகைய சூழலில், விஜய்யின் ஆதரவாளராக அறியப்பட்ட பாலாஜி இவருடன் இணைந்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. வரும் தேர்தலில் ஜோஸ் சார்லஸின் கட்சிக்காகத் தாடி பாலாஜி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.