
இன்றைய தினம் (18) ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியிருந்தார்.
அங்கு அவர் சுமார் 32 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேசி, தொண்டர்களையும் பொதுமக்களையும் உற்சாகப்படுத்தினார். விஜய் அவர்கள் பேசுகையில், “எல்லாரையும் என்னால் எதிர்க்க முடியாது; களத்தில் நிற்பவர்களைத் தான் எதிர்க்க முடியும்” என்று குறிப்பிட்டார். இது யாரைக் குறிக்கிறது என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
இது திமுக அல்லது அதிமுகவைக் குறிப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இவ்விரு கட்சிகளும் தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றிய கட்சிகள். நாம் தமிழர் கட்சி தான் தற்போது தமிழ்நாட்டில் பலமிழந்து, 2026 தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று ஒரு தரப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையே விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார் எனக் கருதப்படுகிறது. அதேவேளையில், தற்போது பலவீனம் அடைந்துள்ள அதிமுகவை விஜய் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் வேறு சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகையால், சீமான் அவர்கள் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்பதே பலரது பார்வையாக உள்ளது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத சீமான், சமீபகாலமாக விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், டிவிிகே (TVK) கட்சி இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இன்று நடைபெற்ற மாநாட்டில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மக்கள் வெள்ளத்தில் இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும், தனது கட்சி திமுகவுடன் மட்டுமே நேரடியாக மோதும் என்பதை விஜய் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். “தீய சக்தி திமுக” என்றும் “தூய சக்தி TVK” என்றும் விஜய் முழக்கமிட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. திரண்டிருந்த மக்கள் அனைவரும் இதற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். விரைவில் மேலும் பல முக்கியத் தலைவர்கள் கட்சியில் இணைய உள்ளதாக மேடையிலேயே விஜய் அறிவித்தார்.
இதுவரை எம்.ஜி.ஆர் பற்றி மட்டுமே பேசி வந்த விஜய், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும் பேசி அதிமுக ஆதரவாளர்களைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறார். இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் திருப்புவதோடு, அக்கட்சியை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் விஜய் இறங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.