-

18 ஜன., 2026

தையிட்டி சட்டவிரோத விகாரை விகாரதிபதியை முன் வரிசையில் அமர்த்தி அழகு பார்த்த ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய
 விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாதது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில்,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்து கொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். 

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தி உள்ளார். 

இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். 

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும், நாக விகாரை பிக்கு, ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். 

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். 

தமிழ்மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய் கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ad

ad