-

18 ஜன., 2026

ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பதிலடி உறுதி: ட்ரம்பிற்கு மேக்ரான் மிரட்டல்! [Sunday 2026-01-18 06:00]

www.pungudutivuswiss.com

கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்

.

மூன்று தலைவர்களும் இந்த வரி விதிப்பு மிரட்டலைக் கண்டித்துள்ளனர். ட்ரம்ப் அந்த நாடுகளை மிரட்டிப் பணியவைக்க முயற்சிப்பதாக பிரதமர் கிறிஸ்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனி, டென்மார்க், நார்வே, பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் சேர்த்து, இந்த மூன்று நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்குள் நுழையும் எல்லா வகையான பொருட்களுக்கும் பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்திருந்தார்.

இதற்கு உடனடியாகப் பதிலளித்துள்ள ஜனாதிபதி மேக்ரான், ட்ரம்பின் 10 சதவீத வரி விதிப்புகள் அமுலுக்கு வரும் என்றால், எட்டு நாடுகளிடமிருந்தும் ஒருங்கிணைந்த பதிலடி உறுதி என எச்சரித்துள்ளார்.

மேலும், உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது, ​​எந்தவொரு மிரட்டலோ அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது என மேக்ரான் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. அந்த அச்சுறுத்தல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், ஐரோப்பியர்கள் ஒருமித்த மற்றும் ஒருங்கிணைந்த முறையில் அவற்றுக்கு பதிலளிப்பார்கள் எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பிய இறையாண்மையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை நாங்கள் அறிவோம் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் பல ஆண்டுகளாக தனது நேட்டோ கூட்டாளிகளை பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பாக அடிக்கடி விமர்சித்து வருகிறார். பல ஆண்டுகளாக அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுவதற்கும் மானியம் வழங்கி வருகிறது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிரீன்லாந்து விவகாரத்தில் ஜூன் 1-ஆம் திகதிக்குள் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், வரி 25 சதவீதமாக உயரும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தெரிவிக்கையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான விடயங்களில் டென்மார்க்கும் கிரீன்லாந்தும் மட்டுமே முடிவெடுக்கும். எங்களை மிரட்டிப் பணிய வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக ஸ்வீடன் தற்போது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே மற்றும் பிரித்தானியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்றே தெரிய வருகிறது.

இதனிடையே, ட்ரம்பின் இந்த நடவடிக்கை தவறானது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டார்மர், கிரீன்லாந்து குறித்த எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, அது டென்மார்க்கின் ஒரு பகுதி என்பது உறுதி, அதன் எதிர்காலம் கிரீன்லாந்து மக்களுக்கும் டென்மார்க் மக்களுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் ஆகும்.

மட்டுமின்றி, நேட்டோ உறுப்பு நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பிற்காகச் செயல்படும் நட்பு நாடுகளின் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறானது என குறிப்பிட்டுள்ள ஸ்டார்மர், நிச்சயமாக, நாங்கள் இந்த விடயத்தை அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம் என்றார்.

ad

ad