ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகருக்கு அருகே உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு பகுதியில், சாதாரண மாலை நேர கால்பந்து போட்டி நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென போலீஸ் உடையில், முகமூடி அணிந்த மூன்று ஆயுததாரிகள் மைதானத்திற்குள் நுழைந்தனர். இதைப் பார்த்ததும் அங்கிருந்த வீரர்கள் அனைவரும் பயத்தில் தரையில் படுத்துக்கொண்டனர். ஆனால், அந்த கும்பலின் நோக்கம் வேறு. அவர்கள் மைதானத்தின் மையப்பகுதியில் நின்றிருந்த கருப்பு உடை அணிந்த ஒரு நபரை மட்டும் குறிவைத்து Point-blank range-ல் (மிக அருகில்) சுட்டுத் தள்ளினர். இந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த Security footage-ல் பதிவாகிப் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் 'மாலினோ' என்று அழைக்கப்படும் ஸ்டாலின் ரோலண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியைக் கலக்கி வரும் 'லாஸ் லகார்டோஸ்' (Los Lagartos - தி லிசார்ட்ஸ்) என்ற நிழல் உலகக் கும்பலின் தலைவன் எனத் தெரிகிறது. இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக, அந்த கும்பல் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு அவர்களது ஆயுதங்களையும் திருடிச் சென்றுள்ளனர். மொத்த ஆபரேஷனும் வெறும் ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட்டது. மைதானத்தில் ஒருவர் பலியான நிலையில், அருகே இருக்கும் பகுதிகளில் மேலும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கொல்லப்பட்ட மற்ற இருவர் மீதும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல Criminal records இருப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். உளவுத்துறை தகவலின்படி, ஸ்டாலின் ரோலண்டோ தனது பழைய கேங்கை விட்டுவிட்டு, 'லாஸ் லோபோஸ்' (Los Lobos - தி வுல்வ்ஸ்) என்ற எதிரி கும்பலில் சேரத் திட்டமிட்டிருந்தாராம். இந்தத் துரோகமே அவருக்குச் சாவாக வந்து முடிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, இது ஒரு Rival gang நடத்திய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என உள்துறை அமைச்சர் ஜான் ரெய்ம்பர்க் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையில் ஒரு சுவாரசியமான பின்னணியும் உள்ளது. கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ஸ்டாலின், அந்த மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் மகளான மைக்கேலா மோரல்ஸின் காதலர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் பல நாட்களாக அவரைத் தேடி வந்த நிலையில், எதிரி கும்பல் அவரைத் தந்திரமாக முடித்துவிட்டது. போலீஸ் வேடத்தில் வந்து இந்தத் துணிகரக் கொலையைச் செய்த குற்றவாளிகளைத் தேடப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
