'தித்வா' சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்றவற்றால் நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரகாலத்தின் பின்னர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப்பிரகடன வழிகாட்டல்கள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புக்கள் குறித்து அதில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தது. அதுமாத்திரமன்றி அவசரகாலச்சட்ட விதிகளின் முறையான பிரயோகம் குறித்தும் அக்கடிதத்தில் விரிவாக விளக்கமளித்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலநிலையை மேலும் காலநீடிப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அவசரகாலப்பிரகடன வழிகாட்டல்கள் தொடர்பான தமது அவதானிப்புக்களை ஜனாதிபதிக்கு அறியத்தந்திருந்த போதிலும், அதனைக் காலநீடிப்பு செய்து வெளியிட்டிருக்கும் வழிகாட்டல்களில் எவ்வித மாற்றங்களையும் அவதானிக்க முடியவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே வழிகாட்டல்களே தற்போது மீண்டும் காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு அவசரகாலநிலை பிரகடனம் தொடர்வது அவசியம் என நியாயப்படுத்த முடிந்தாலும், அதில் உள்வாங்கப்பட்டுள்ள சில வழிகாட்டல்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகவே உள்ளன. அவை குறித்து நாம் ஜனாதிபதிக்குக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும், காலநீடிப்பு செய்யப்பட்டுள்ள அவசரகாலநிலை பிரகடனத்தில் எமது அவதானிப்புக்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை' என நிமல் புஞ்சிஹேவா கரிசனை வெளியிட்டுள்ளார். |