வெள்ளி, செப்டம்பர் 07, 2012


தேர்தல் களமும், தாயகத் தமிழரின் பங்கும்
எமது தாயகத்தின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவதன் மூலம் சிங்களப் பேரினவாதம் தனது யுத்த வெற்றியாக வெளிக்காட்ட முற்படுவதோடு, தனது நீண்டகால நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழர் நிலப்பரப்பை அபகரித்து, அதில் சிங்களக் குடியேற்றங்களையும் பௌத்த விகாரைகளையும் அமைத்து சிங்கள பௌத்த தேசமாக்குவதற்கே முனைகிறது.
இதற்கு தமது திட்டங்களுக்கு இசைந்து போகும் சில சுயநலம் கொண்ட தமிழினத் துரோகிகளை கைப்பொம்மைகளாக வைத்து சிங்களப் பேரினவாதம் செயற்படுகிறது.
இத்தேர்தலில் பங்குகொள்வதன் ஊடாக எமது மக்களுக்கான விடுதலையையோ அல்லது இதற்கான அடிப்படைக் காரணிகளையோ ஏற்படுத்த முடியாது என்பது யதார்த்தம். இருப்பினும் தனது அதிகார பேரினவாத வெளிப்பாடாக மக்களின் கருத்துக்களைப் புறந்தள்ளி சிங்கள அரசு நடாத்தும் இத்தேர்தலை புறக்கணிப்பதன் ஊடாக சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளாக ஆளும் சூழலையோ அல்லது வாய்ப்பினையோ நாம் வழங்க முடியாது.
கலாசார சீரழிவு, பாலியல் வல்லுறவு, நில ஆக்கிரமிப்பு, காணாமல் போதல்கள், தற்கொலை எனும் பெயரால் நடக்கும் படுகொலைகளென நாளாந்தம் சொல்லொனா துயருக்குள் மக்களாகிய உங்களை வைத்து வதைக்கும் சிங்களப் பேரினவாதம், இத்தேர்தல் வெற்றி ஊடாக தமிழர்களை ஆளும் அதிகாரத்தையும் பெற்று மேலும் தமிழின அழிப்பையும், நில அபகரிப்பையும் துரிதகதியில் நடாத்தி சிங்கள மயமாக்கலுக்கு முனைகிறது.
இச்சூழலில் பிரதேசவாதத்தினையும், இன்னும் சில காரணங்களையும் முன்வைத்து இத்தேர்தலில் தாம் வெற்றிபெற வேண்டும் என்று சிலர் முற்படுவதினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான விடையங்கள் வடக்கு, கிழக்கினை பிரிப்பதுடன் தமிழர்களின் தார்மீக விடுதலையையும் நசுக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும். இவ்வாறான எண்ணத்துடன் நடாத்தப்படும் இத்தேர்தலில் தமிழ்த் தேசியத்தினை மறுதலிப்பவர்களை புறந்தள்ளி தமிழ்த்தேசிய உணர்வுடன் விடுதலையை நேசிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்து எமது உறுதியையும், உரிமையையும் வெளிக்காட்டும்படி அன்புரிமையுடன் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். உங்களின் விடுதலை உணர்விற்கும் தேசிய ஒற்றுமைக்கும் புலம்பெயர் தமிழீழ மக்களாகிய நாம் என்றும் துணையாக நிற்போம்.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்