புதன், செப்டம்பர் 02, 2015

14 பேரில் 8 உறுப்பினர்களை கொண்ட தமிழரசு கட்சி மௌனம் ஏன்?,, சிவசக்தி ஆனந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த
கொழும்பில் தமிழரசுக் கட்சியை தவிர்த்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய இணைந்து
உள்நாட்டு விசாரணையை எதிர்த்து நீதியான சர்வதேச விசாரணையை வலுயுறுத்தி ஐ.நாவிற்கு கடிதம் என்றியை அனுப்பி வைத்திருந்தனர்.
இது போல இன்றும் வடமானாணசபையில் முதலமைச்சரினால் சிறப்பு பிரேரணை ஒன்று சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க த.தே.கூட்டமைப்பில் 14 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 8 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசு கட்சி மட்டும் மௌனம் காக்கின்ற நிலையில் அதனை தட்டிக்கேட்க நாதியற்றவர்களாக வாக்களித்த தமிழ் மக்கள் இன்று உள்ளனர்.
இதனை முன்னிட்டு யாழ் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் உங்கள் பார்வைக்காக இணைக்கின்றோம்.
பாரதப் போரில் தர்மம் வென்றாலும் பாண்டவர் தரப்பில் பேரிழப்புகள் நடந்தது பேருண்மை. தர்மம் வென்றதாயினும் பாண்டவர் தரப்பும் இழப்புகளைச் சந்தித்தது என்ற உண்மையை ஆராய்ந்தால், பாண்டவர்கள் பக்கத்தில் இருந்து அருச்சுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணன், கெளரவர்களுக்குக் கொடுத்த ஆயுதங்களே அதற்குக் காரணமாக இருந்தன என்பதைக் கண்டறிய முடியும்.
பாண்டவர்களுக்கு தன்னைக் கொடுத்த கிருஷ்ணன், துரியோதனன் தலைமையிலான கெளரவ சேனைக்கு தனது ஆயுதங்களைக் கொடுத்தான். பாரதப் போர் நடந்த போதுதான், தான் கொடுத்த ஆயுதங்களில் இருந்து தன்னையும் பாண்டவர்களையும் காப்பாற்ற கிருஷ்ணன் பட்டபாடு போதுமென்றாயிற்று. அத்தகையதொரு நிலைமையில் தான் தமிழ் மக்கள் தற்போது இருக்கின்றனர்.
ஆம், தமிழ் மக்கள் 2015 ஆகஸ்ட் 17ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அளித்த வாக்கு என்ற ஆயுதம் இப்போது தமிழ் மக்களைத் தாக்கு கிறது. சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புத் தலைமை ஏதோ ஒரு வகையில் உடன்பட்டுவிட்டது என்பது தெளிவாகிறது.
எதிர்க்கட்சித் தலைமைக்காக அல்லது வேறு சில தேவைகளுக்காக இந்த உடன்பாடு இருக்கலாம். வன்னியில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழகத் தலைவர்கள் உட்பட அனைத்துத் தமிழ்த் தரப்பும் வலியுறுத்தி நிற்கின்ற வேளையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புத் தலைமை மட்டும் சர்வதேச விசாரணை பற்றி மெளனம் காக்கிறது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கணிசமான வெற்றியை தமிழர் தாயகத்தில் பெற்றுக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியே சர்வதேச விசாரணை தேவை எனப் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்தக் கட்சியின் தலைமை மெளனமாக இருப்பது எதற்காக என்பதை ஆராய்வது நல்லது. இதேவேளை லண்டன் பி.பி.சிக்கு இரா.சம்பந்தன் வழங்கிய செவ்வி ஒன்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
இதன் பொருள், மகிந்த ராஜபக்­சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியது என்பதேயன்றி நிகழ்காலத்தில் அப்படியான வலியுறுத்தல் இல்லை என்பதாக அமையும். ஆக, வன்னியில் நடந்த கொடும் போர் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற விடயத்தில் தமிழர்களின் கொழும்புத் தலைமை மெளனமாக இருப்பது மிக மோசமான- தமிழ் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதான செயற்பாடாகும் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்.
என்ன செய்வது? கெளரவர்களிடம் தனது ஆயுதத்தைக் கொடுத்த கிருஷ்ணன் அந்த ஆயுதங்களே தன்னைத் தாக்குவதை உணர்ந்தபோது எப்பாடுபட்டிருப்பான்? அந்த நிலையில்தான் இப்போது தமிழ் மக்கள். தமிழரசுக் கட்சிக்கு அளித்த வாக்குகள் இப்போது வாக்களித்தவர்களையே தாக்குகிறது எனில் நிலைமை எப்படியிருக்கும்? எல்லாம் எங்கள் தலைவிதி.