புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2012

இன விடுதலைக்கான போராட்டத்தின் வடிவமாக இத்தேர்தலை சந்திக்கிறோம்: தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள்.
தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம். இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் ஓரணியாக இணைந்திருக்கின்றார்கள் என்ற செய்தியை உலகிற்கு எங்களால் சொல்ல முடியும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சீறிதரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மட்டக்களப்பு, கல்லடி, பேச்சியம்மன் ஆலய முன்றிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வருகின்ற மாதம் ஜெனிவாவிலே மிகமுக்கியமாக இடை விவாதம் ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழிவின் ஒரு அத்தியாயமாக நடக்க இருக்கின்றது.
கிழக்கு மாகாணசபையை ஒரு வருடங்களுக்கு முன்பாகவே வருகின்ற செப்டம்பர் மாதத்திலே நடத்தி, அதன் திசைகளை திருப்புவதற்காக அரசாங்கம் ஒரு தேர்தலை அறிவித்து அதிலே பங்குபற்ற வேண்டிய நிர்ப்பந்தமான சூழலிலே நாங்கள் இருக்கின்றோம்.
ஜெனிவாவினுடைய தீர்மானத்தின் இறுதிக்கட்டம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில் அனைவரையும் திசைதிருப்புவதற்காக வடமாகாணசபைத் தேர்தலை அரசு நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு மாதத்திற்கு முன்னர் வவுனியாவில் தங்களது விடுதலைக்காக போராடிய 35 சிறைக்கைதிகள் அங்கிருந்த சிறைக்காவலர்களால் சிங்கள அரச பயங்கரவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டு அவர்களது கை கால்கள் உடைக்கப்பட்டு கைதி நிமலரூபன் கொல்லப்பட்டார்.
டில்ருக்ஷன் படுகொலை செய்யப்பட்டு 16 நாட்களுக்குப் பின்னர் கோமா நிலையில் இருந்து பின் அவரும் கொல்லப்பட்டு இன்னும் இரண்டு கைதிகள் இயங்க முடியாத நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். மற்றைய 31பேரின் நிலவரம் என்னவென்று தெரியாத சூழலில் நாங்கள் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம்.
நாங்கள் நிமலரூபனுடைய இறுதிச் சடங்கிற்கு சென்றிருந்தபோது அவருடைய கால்கள் இரண்டும் அடித்து முறிக்கப்பட்டிருந்ததையும் மிக மோசமாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருந்ததையும் அவதானித்தோம்.
டில்ருக்ஷன் 16நாட்கள் கோமாவில் படுத்திருந்த கட்டிலோடு விலங்கிடப்பட்ட நிலையில் ஆசியாவின் ஆச்சரியமான இலங்கை நாட்டில் இதுவும் ஒரு ஆச்சரியமாக வைத்தியசாலையில் நடத்தப்பட்ட நிலையில் அவரும் மரணத்தை தழுவினார்.
நாங்கள் தமிழீழத்திற்காக போராடி ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு மண்ணள்ளிப்போட்டு, பூப்போட்டு தரவையிலும் தாண்டியடியிலும் கோமாரியிலும் ஆயிரம் உயிர்களை புதைத்துவிட்டு வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த தாயக மண்ணின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அதிகாரங்களை பெறுவதற்காக இங்கு கூடியிருக்கின்றோம்.
இந்தியாவில் இருக்கின்ற மொழிவாரி அடிப்படையிலான மாகாணங்களில் கூட சில அதிகாரங்கள் ஏதோவொரு வகையில் இருக்கின்றது. ஆனால் எங்களுடைய மண்ணில் நாங்கள் ஒரு ஆட்சிமுறையையும் அதிகாரப் பகிர்வையும் எதிர்பார்த்திருக்கின்ற சூழலில் இலங்கை அரசு எங்களுக்கான எந்தவொரு அதிகாரத்தையும் தரமுடியாத சிங்கள் இனவாத வெறியோடு இருக்கின்றது.
நாங்கள் இந்த தேர்தலில் பங்குபெறாவிட்டால் சில சக்திகள் இந்த இடங்களில் அமர்ந்து கொள்ளும். இதை தவிர்ப்பதற்காகவே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக சரித்திர பூர்வமாக எங்களது தாயக மண்ணாகும். மூன்று ஜே.வி.பி உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக மிக எளிமையாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் கிழக்கு மாகாணத்தில் தனியொரு தேர்தலுக்கு நாங்கள் முகங்கொடுக்க இருக்கின்றோம்.
இந்த தேர்தலில் வென்று நாங்கள் இந்த மக்களுக்கு என்ன செய்யப்போகின்றோம் என்பது உங்கள் மத்தியிலுள்ள பலமான கேள்வியாகும்.
நாங்கள் அடைய இருக்கின்ற இலட்சியத்தினுடைய ஒரு பாதையாக வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டிய தேவைக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இலங்கை சட்டக் கல்லூரியினுடைய அனுமதிப் பரீட்சைக்கான ஒரு புத்தகத்தில் மாகாண சபைகள் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி சரியாக தலைப்பு இருந்தது.
வடக்கு கிழக்கிலே இருக்கின்ற தமிழர்கள் தன்னாட்சி கேட்டு போராடியதன் விளைவாக உருவாக்கப்பட்டதே இந்த மாகாணசபைகளாகும். ஆனால் அது இன்று அவர்களுக்குப் பெறுமதியாக இல்லை.
இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்கின்ற இடங்களில் ஏனையஏழு மாகாண சபைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
யாருக்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ தீர்வு முயற்சி எடுக்கப்பட்டதோ அவர்கள் அதை ஆளவும் முடியாமல் பயன்படுத்தவும் முடியாமல் திணறுகின்றார்கள்.
13ஆவது திருத்தச்ச ட்டத்திலே கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் சிறுசிறு அதிகாரங்களை இந்த மாகாணசபை செய்ய முடியும்.
அதையும் ஆளுனரிடம் கொடுத்து மத்திய அரசிடம் கொடுத்து சட்டமாக்கல் சபையான பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுத்ததன் பின்னரே நடைமுறைப்படுத்த முடியும்.
தேசிய பாதுகாப்பு, போக்குவரத்து, தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல் தொடர்புகள் எல்லாமே மத்திய அரசின் கீழ் இருக்கும். தமிழர்கள் கடந்த 60ஆண்டுகளாக போராடினோம்.
30ஆண்டுகளாக அகிம்சை ரீதியாகவும் 30ஆண்டுகள் ஆயுத ரீதியாகவும் போராடினோம். அதனால் பெற்றது கிழக்கிற்கும் வடக்கிற்கும் தனியான மாகாணசபைகளாகும்.
அதிகாரங்கள் சரியான முறையில் எங்களுக்கு வழங்கப்படாத சூழலில் நாங்கள் ஏன் இந்த தேர்தலில் பங்குகொள்கின்றோம்.
நாம் தமிழர்கள். எங்களுடைய உரிமைப் போராட்டம் இன்னும் முடியவில்லை. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் வடக்குகிழக்கு என்ற எங்கள் தாயக மண்ணில் எங்கள் இன விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தின் ஒரு வடிவமாக இந்ததேர்தலை நாங்கள் சந்திக்கின்றோம்.
ஒரு தமிழனாக ஒரு தமிழனுக்கு வாக்களிக்கின்றேன் என்கின்ற உணர்வோடு எம்மவர்களை வாக்களிக்க வையுங்கள். இது எமது போராட்டத்தின் ஒரு வடிவம் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள் என தெரிவித்தார்.

ad

ad