புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2012


கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முல்லைத்தீவு வயோதிபருக்கு காத்திருந்த சந்தோச அதிர்ச்சி!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார்.
ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்த ஈஸ்வரனுக்குத் தெரியாது.
இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர்.
பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.
தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்த ஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.

ad

ad