இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட பின்னர் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று இலங்கை இராணுவம் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் என கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

109 வட பகுதி தமிழ் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று (17) கிளிநொச்சி பாரதிபுரத்தில் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றிய உதய பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பெற்றோர் இன்று கண்ணீர்விட்டு தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்த்துள்ளனர். இது ஒரு கௌரவமான தொழில். அதனால் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் வழங்கியுள்ள வீரத்தாய்மார்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

உலகில் எந்த இடத்திற்கும் சென்று இலங்கை இராணுவம் என்று கூறி பெருமைபட முடியும். அந்தளவிற்கு எமக்கு சர்வதேசத்தில் அங்கீகாரம் உள்ளது.

இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் பெண்களுக்கு 30 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும். அது மாத்திரம்றி உடை, உணவு, போக்குவரத்து, சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

இலங்கை இராணுவத்தில் 105 பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவு மாத்திரமே ஆயுதம் ஏந்தி போராடும் பிரிவு. ஏனைய பிரிவுகள் அப்படியல்ல. எனவே தமிழ் பெண்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க மாட்டோம். இராணுவ பயிற்சி அளிப்போம்.

இவ்வாறு கிளிநொச்சி படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா குறிப்பிட்டார்.