புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2012

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.



பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளின் அறிக்கை எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலேயே அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த மூன்று நாடுகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய பேரவையினால் நியமிக்கப்பட்டபோது இலங்கை அது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

காரணம் குறித்த மூன்று நாடுகளும் இவ்வருடம் மார்ச் மாதம் ஐநாவில் நடைபெற்ற 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடர் கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் இம்மாதம் முதலாம் திகதியே மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த அமர்வில் இலங்கையிடம் கேள்விகளை எழுப்புவதற்கு 99 நாடுகள் தயாராக இருந்தநிலையில் அவற்றில் 20நாடுகள் முன்கூட்டியே தமது கேள்விகளை பேரவைக்கு அனுப்பியிருந்தன.

கடந்த முதலாம் திகதி இலங்கையின் சார்பில் பேரவையின் அமர்வில் உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலமை தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதாவது யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல்கள் தொடர்பில் அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

அத்துடன் தற்போதும் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் செயற்பட்டுவருவதாகவும் நல்லிணக்கம், அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளினால் அவற்றைத் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரைக்குப் பின்னர் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கேள்விகளை எழுப்பியிருந்தன.

குறிப்பாக மனித உரிமை விவகாரம், 13வது திருத்தச் சட்டம், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, வட மாகாண சபைத் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து பல நாடுகளும் கேள்வியெழுப்பியிருந்தன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் பிரதிநிதி, நீதித்துறையில் அழுத்தங்கள் இருக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க பிரதிநிதியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருந்த இந்தியாவின் பிரதிநிதி வட மாகாண சபைத் தேர்தல் குறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க வடமாகாண சபைத் தேர்தலானது உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடர் நடைபெற்ற காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராய்ந்து வந்த இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகள் தமது அறிக்கையை தயாரித்து இன்று பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad