புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்றது.
2-வது ஒரு நாள் போட்டி கொச்சியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்பட்ட இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் தொடக்கம் மோசமாக இருந்தது. 18 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர். 3-வது ஓவரின் கடைசி பாலில் காம்பீரும் (8 ரன்), 5-வது ஓவரின் 3-வது பாலில் ரகானேவும் ஆட்டம் இழந்தனர். டென்பேச், ஸ்டீவன்பின் இவர்களை அவுட் செய்தனர்.

3-வது விக்கெட்டுக்கு வீராட்கோலியுடன், யுவராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் விழாமல் இருக்கும் வகையில் மெதுவாக ஆடியது. 32 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங் ட்ரெட்வெல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து கோலி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 26 ஓவருக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் களமிறங்கி இங்கிலாந்து  பந்துவீச்சை பொறுமையாக கையாண்டனர். திறமையாக விளையாடி ரெய்னா அரை சதத்தை கடந்தார். 55 ரன்கள் எடுத்த நிலையில் பின் பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து டோனியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர். திறமையாக விளையாடிய இருவரும் அரைசதத்தை கடந்தனர். டோனி 72 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். இவருடைய அதிரடியில் 7 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து கௌரவமான ஸ்கோரை எட்டியது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 68 ரன்களை எடுத்தது. ஜடேஜா 61 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பின், டென்பேச் தலா 2 விக்கெட்டுகளும், ஓக்ஸ், ட்ரெட்வெல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து 286 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். 2-வது ஓவரில் இயன் பெல்லை (1 ரன்) வெளியேற்றி, இந்தியாவின் விக்கெட் கணக்கைத் தொடங்கினார் ஷாமிஅகமது. அதன்பின்னர் மற்றொரு அலைஸ்டர் குக் (17 ரன்), பீட்டர்சன்(42 ரன்), மோர்கன் (ரன் இல்லை) ஆகிய முன்னணி வீரர்களை புவனேஸ்குமார் பெவிலியனுக்கு அனுப்பினார். 

மறுமுனையில் அணியை சரிவில் இருந்த  மீட்கப் போராடிய ரூட், 36 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்தில் போல்டானார். அதே ஓவரில் கிறிஸ் வோக்ஸ் டக் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 135-ஐ தொட்டபோது அஸ்வின் ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் டிரெட்வெல்(1 ரன்), பின்(ரன் இல்லை) ஆகியோர் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டான டென்பேச் 2 ரன்களில் ரன் அவுட் ஆக, இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 158 ரன்களுக்குள் சுருண்டது. சமித் பட்டேல் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய இந்திய அணி, இப்போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புவனேஸ்குமார், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், ஷமி அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. 3-வது போட்டி ராஞ்சியில் 19-ம் தேதி நடக்கிறது.

ad

ad