புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


DSC09555
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்
உட்பக்கத்தில் றிஸானாவின் தாய் உறவினர்கள் சூழ்ந்திருக்க அழுது கொண்டிருக்கும் அவலத்தைக் காணக்கிடைத்தது.
DSC09535
நான் அங்கு நிற்பதை றிஸானாவின் தாயார் எப்படியோ அவதானித்து விட்டார். அந்தோ அழுகைச் சத்தம் சற்று அதிகரித்தது… ‘பொய்யைச் சொல்லி போட்டிங்கள… எண்ட புள்ள எங்க…? என்ற வாசகம் திடீரென என் காதில் வந்து குத்தியது. அப்போதுதான் நான் அவரிடம் சொன்ன ‘பொய்’ எனக்கே ஞாபனத்திற்கு வந்தது!
சில வாரங்களுக்கு முன்பு றிஸானாவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு சகோதர இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் றிஸானாவின் தாயிடம் கூறும்படி கூறியதையே(பொய்யை) நானும் கூறினேன். அக்கூற்று பொய்த்து விட்டதனாலேயே நானும் அவ்வேளையில் பொய்யனாகி விட்டேன்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என்னிடம் சொன்ன அந்தப் பொய்யின் சுருக்கம் இதுதான். ‘றிஸானாவின் விடுதலைக்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றேன்… உங்கள் வீட்டிற்கு இனி வருவதாக இருந்தால் றிஸானாவையும் அழைத்துக் கொண்டுதான் வருவேன்… எனது முயற்சி வெற்றிபெற உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்….’
குறித்த கூற்றின் மூலம் கூற்றுக்குச் சொந்தக் காரரும் நானும் பொய்யனாகி விட்டபோதும் ‘எனது முயற்சி வெற்றிபெற உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்…’ என்று அவர் சொன்னதும் அதனை நான் ‘அவரது முயற்சி வெற்றிபெற அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்’ என்று கூறியதும் இங்கு எவரும் திட்டமிட்டு பொய் சொல்ல வில்லை என்பதையே புலப்படுத்துகிறது என்று கூறுவதன் மூலம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கின்றேன்.

றிஸானாவின் தாயாரின் எதிர்பார்ப்பு :
றிஸானாவின்; தாயாரின் ஒரே எதிர்பார்ப்பு எப்படியாவது தனது மகளை மீட்டிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதனாலேயே தன்னைச் சந்திக்க வரும் அனைவரிடமும் றிஸானாவின் விடுதலை பற்றியே அவர் பேசுவார். தனது குடும்ப நிலைமையைக் கவனத்திற் கொண்டு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கோ, வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கோ சிலர் முன்வந்தபோதும் அவ்வுதவிகளை ஏற்க மறுத்த அவர், அவர்களிடம் கூறியதெல்லாம் தனது மகளுக்கு விடுதலை பெற்றுத்தாருங்கள் என்பதைத்தான்.
றிஸானாவின் தாயாரதும் அவரது குடும்பத்தவர்களதும் எதிர்பார்;ப்பு மட்டுமன்றி மூதூர் பிரதேச மக்களினதும் தாய் நாட்டினதும் கூறப் போனால் மொத்த உலகத்தினதும் எதிர்பார்;ப்பும் றிஸானா விடுதலைபெறவேண்டும் என்பதாகவே இருந்தது.
இருந்தபோதும் ‘ஷரீஆ’ சட்டப்படி றிஸானாவின் விடுதலைக்காக இருந்த ஒரேயொரு வாயிலான மரணித்த குழந்தையினது குடும்பத்தவரது (தாயாரின் )மன்னிப்பு என்னும் வாயில் மூடப்பட்டதனால்; அனைவரது எதிர்பார்ப்பும் வெறுமையாகி விட்டது.
றிஸானாவின் அந்த இறுதி நேரம்: (11:40)
அல்லாஹுதஆலா ஒருவரது மரணத்தை நிச்சயிக்கின்ற போது மனிதர்களாகிய நாம் கூறத்தக்கவாறு காரணங்களும் வந்து வாய்த்து விடுகின்றன. அதனால் அல்லாஹுதஆலாவின் ஏற்பாட்டை மறந்துவிட்டு மரணத்திற்கான காரணத்தை மட்டும் நாம் விவாதிப்பதால் பலனில்லை.சகோதரி றிஸானாவிற்கு ஏற்பட்ட முடிவையும் இந்த வகையிலேயே நாம் நோக்க வேண்டும்.
றிஸானாவிற்கு அந்த இறுதி நேரத்திற்கு முன்பு இறுதி ஆசை சம்பந்தமாக வினவப்பட்டபோது ஒன்று- இரண்டு ‘ரகஆத்’ தொழுது அல்லாஹ்விடம் உரையாட வேண்டும் என்றும் மற்றது தன்னிடமிருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாசை பொறுப்பேற்கப்பட்டதன் பின்பு றியாத்திலுள்ள ‘தாஹிலுல் ஸிஜ்ள்’ என்னும் உள்ளக சிறையில் புதன் கிழமையன்று (2013.01.09) சரியாக 11: 40 மணியளவில் றிஸானாவிற்கு அந்த இறுதி நேரம் எற்பட்டுள்ளது. (இன்னா இல்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்)
மூதூர் முக்கியஸ்தர்களின் முக்கியமான கலந்துரையாடல்:
றிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து முக்கியஸ்தர்களின் கலந்துரையாடலொன்று புதன் கிழமையன்று (2013.01.09) இரவு மூதூரில் இடம்பெற்றது.
DSC09506
மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மொளவி எம்.எம். கரீம் நத்வி தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் ஜம்மியதுல் உலமா,கதீப்மார்கள் சம்மேளனம், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் முதலானவற்றின் பிரதிநிதிகளோடு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்தீர்மானங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.
1. ‘ஷரீஆ’ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றோம்.
2. மரணித்த குழந்தையின் தாயிடம் றிஸானாவை மன்னிக்கும் படி கோரிய அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மூதூர் பிரதேச மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
3. ‘ஷரீஆ’ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சம்பந்தமான சரியான புரிதலை சகோதர இனத்தவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு முயலுகின்றோம்.
4. றிஸானாவின் குடும்பத்தவரது அவல நிலையைப் போக்கும் வகையில் நலன்புரிச் சேவைகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களை அழைக்கின்றோம்.
5. ‘ஷரீஆ’ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக எந்தவோர் வகையிலும் எவரும் செயற்படாதிருப்பதற்கு அனைவரும் இணங்கிக் கொள்கின்றோம்.
6. மரண தண்டனைக்குள்ளான சகோதரியின் மறுமைவாழ்வு ஜெயம் பெறுவதற்கு அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு அனைத்து உள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
றிஸானா கற்றுத்தந்த பாடம்:
றிஸானா பள்ளிப் பருவத்தில் ஏன் ஒரு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரு கேள்வியைக் கேட்டாள் அதற்கு பூரணமான விடை ஒரு முறை அவரது வீட்டை சென்று பார்த்தாலே போதும் புரிந்து விடும்! குடியிருப்பதற்கு வீடில்லை,சொல்லுமளவில் வேறு வசதிகள் என்று எதுவுமேயில்லை.
அதற்குள் நான்கு பிள்ளைச் செல்வங்களில் மூவர் பெண் பிள்ளைகளாவர். றிஸானாவின் தந்தைக்;கு நிரந்தர தொழிலில்லை. போதிய வருமானமும் இல்லை. இத்தகைய பின்புலத்தில் றிஸானாவினால் சிறப்பாக படிக்கவும் முடியவில்லை.
இதனால் இருப்பதற்கு ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். தனது தங்கைகளை நன்றாகப் படிப்பிக்கச் செய்ய வேண்டும். இற்கு இருக்கும் வழிகளில் இலகுவான வழிதான் வெளிநாடு செல்வது. அந்த வழியைத்தான் றிஸானாவினால் தேர்ந்தெடுக்கவும் முடிந்தது.
றிஸானா வெளிநாடு சென்றது அவரது குற்றமில்லை. அவரது குடும்பத்தவரது குற்றமுமில்லை. கேடு கெட்ட இந்த சமூகத்தின் குற்றம். ஏழை வரியை சரியாக எடுக்கவும் கொடுக்வும் திட்டமிடல் இல்லாத இந்த சமூகம், ஆண்களுக்கு வழங்கவேண்டிய 2 பங்கு சொத்துரிமையை புறக்கணித்த இந்த சமூகம், மஹருக்கு பதிலாக சீதனத்தை முதன்மைப்படுத்திய இந்த சமூகம், பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பதை ஆகுமாக்கிக் கொண்ட இந்த சமூகம் செய்த குற்றம்!
எனவே, றிஸானா கற்றுத்தந்த பாடத்திலிருந்து படிப்பினை பெறுவோம்.இஸ்லாத்திற்கெதிரான சமூக மரபுகளை உடைத்தெறிந்து ஈமானிய சமூகத்தை சமைப்பதற்கு ஒன்றிணைவோம். அதற்காக பேசுவோம், அதற்காக எழுதுவோம், அதற்காக அழைப்போம் வாருங்கள் சகோதரர்களே…!

ad

ad