புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2013


வலி.வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பகுதிகள் எதுவும் விடுவிக்கப்படமாட்டாது


வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரின் வசமுள்ள பகுதிகளை விடுவிக்க முடியாது என மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இராணுவத்தினரின் வசமுள்ள பெரும்பாலான காணிகள்
அரசினுடையவையே. மிகக் குறைந்தளவான காணிகளே பொதுமக்களுக்குச் சொந்தமானவை எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப்படைத் தலைமையகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வலிகாமம் பகுதியில் தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுமார்  2 இலட்சத்து 8 ஆயிரத்து 23 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்த வலியுறுத்தி தமது ஆதாரங்களைச் சமர்ப்பித்து பிரதேச செயலகங்கள் ஊடாக பதிவு செய்துள்ள நிலையில், இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றப்படவேண்டிய உண்மையான நில உரிமையாளர்கள் வெறும் 4 ஆயிரத்து 823 பேரே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களுக்கு நிலத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதிக்கேற்ப நட்டஈடு வழங்க காணி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்  கூறினார்.
அங்கு அவர் மேலும் கருத்து கூறுகையில்;

வலி.வடக்கில் 11 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவற்றில் அரச காணிகள் 7 ஆயிரத்து 233 ஏக்கராகும்.

போருக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரத்து 306 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்தது தற்போது 11 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பளவு மட்டுமே இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார். இவற்றிலும் 7 ஆயிரத்து 233 ஏக்கர் அரச காணி. ஏனையவையே மக்களுக்குச் சொந்தமான காணிகளாகும்.

போர் நிறைவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர்இராணுவத்தினரின் வசமிருந்த பொதுமக்களின் நிலங்களையும் அவர்களது வீடுகளையும்  படிப்படியாக கையளித்து வருகின்றோம்.

வலிகாமத்தில் 51 ஆவது படைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 557 வீடுகள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 1900 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, யாழ்.நகரை அண்டிய 52 ஆவது படைப்பிரிவினர் வசமிருந்த 2 ஆயிரத்து 411 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்து 306 ஏக்கர் நிலப்பரப்பு இங்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியில் 55 ஆவது படைப்பிரிவினரால் 441 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 1776 ஏக்கர் நிலப்பரப்பும் இப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 3409 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 194 ஏக்கர் பரப்பளவு நிலமும் விடுவிக்கப்பட்டுள்ளது எனவும்  மேஜர்  ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்தார்.

ad

ad