புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2013


ஜெனீவா சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்!

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான இரகசியத் திட்டம் ஒன்று அரசிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜெனிவாவில் இருந்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்வதே இத்திட்டம் என்று அரசின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனிவாவில் ஏதாவது கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்களைக் கைதுசெய்வது என்பதே அரசின் திட்டம் என்று “லக்பிம’ சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தனிநாட்டுக்கு எதிராக அரசமைப்பில் 6ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளசட்டங்களுக்குக் கீழேயே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறுகின்றது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, பா.அரியநேந்திரன், சி.சிறிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தற்போது ஜெனிவாவில் தங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அவர்கள் அங்கு தங்கியிருப்பதால் அரசுக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் தெரிவிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இழப்பதுடன் குறைந்தது 7 வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிடவும் முடியாத நிலை ஏற்படும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இந்த வகையில்சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசுசட்ட ஆலோசனைகளைப் பெற்று வருகின்றது என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் எந்த நாட்டுக்கும் எவரும் சென்று வருவதற்கான உரிமையையும் பேச்சுச் சுதந்திரத்தையும் இலங்கையின் அரசமைப்பு உறுதிப்படுத்துகின்றபோதும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளைவிட எவருக்கும்சட்ட ரீதியான அனுமதி கிடையாது என்று முக்கியமான அமைச்சர் ஒருவர் “லக்பிம’ பத்திரிகையிடம் தெரிவித்திருக்கிறார்.
அதனால் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தொடர்பில் அரச புலனாய்வாளர்கள் தீவிரமாகக் கவனம் எடுத்து வருகிறார்கள் என்றும் அந்த அமைச்சர் கூறியிருக்கிறார்.

ad

ad