புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2013

‘‘மூணு பிள்ளைகளப் பெத்தும் இப்பிடி அனாதியா கிடந்து அவதிப்படுறேன்... இருக்கனா, போயிட்டேனான்னு கூட எதுவும் வந்து பாக்கமாட்டேங்குது. என் பொணத்துக்கும் நானேதான் கொள்ளி வச்சுக்கணும் போலருக்கு... - கண்கள் கலங்க சகுந்தலா சொன்ன இந்த வார்த்தைகளுக்கு அக்கம்பக்கத்தினர் ஆறுதல் மட்டுமே சொல்லமுடிந்தது. தனிமைத் துயரால் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்து வந்த அந்தத் தாய், சுடுகாட்டுக்குச் சென்று, உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே கொள்ளி வைத்துக்கொண்டார்.

இதயமுள்ள மனிதர்களின் உயிரைப் பிடித்து உலுக்குகிறது சகுந்தலாவின் மரணம். பெற்று, வளர்த்து, ஆளாக்கி சமூகத்தில் உலவவிடும் பெற்றோரை, முதுமையில் தள்ளிவைத்து தனிமையில் தவிக்கவிடும்

சுயநலமிகளின் உள்ளத்தில் கொள்ளி வைத்துவிட்டு முடிந்துபோன இந்த 70 வயது அபலைத்தாய் சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர். இன்னும் அந்தப்பகுதி சகுந்தலாவை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

‘‘ரெண்டரை வருஷம் முன்னாடிதாங்க அந்த அம்மா இங்கே குடிவந்தாங்க. தங்கமான மனுஷி. யார்கிட்டயும் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டாங்க. அவங்க வேலையை அவங்களே செய்வாங்க. அவங்க முடியாம கிடந்தா, நாங்களே போய் பாத்து சாப்பாடு கொடுப்போம். சங்கடத்தோட வாங்கிக்குவாங்க. நல்லா வாழ்ந்த மனுஷிங்க. மூணு புள்ளைக... பையன் சைக்கிள் கடை வச்சிருந்தாரு. ஒரு பொண்ணு கல்யாணமாகி நாலைஞ்சு வருஷத்தில இறந்துபோச்சு. இன்னொரு பொண்ணை ஐயப்பன்தாங்கல்ல கட்டிக் கொடுத்திருக்காங்க.

பக்கத்துலதான் இவங்க பூர்வீக வீடு இருக்கு. என்ன பிரச்னையோ, அவங்க பையன் இந்த வீட்டை லீசுக்கு எடுத்து அவங்களயும், அவங்க வீட்டுக்காரரையும் இங்கே குடிவச்சாரு. புள்ளைக மேலயும், பேரன், பேத்திகள் மேலயும் ரெண்டு பேருமே ரொம்ப பாசமா இருப்பாங்க.

இந்த அம்மாவோட வீட்டுக்காரர் டெய்லர். நல்ல மனுஷன். அவரு இருக்குறவரைக்கும் இந்த அம்மாவை தங்கமா வச்சுப் பாத்துக்கிட்டாரு. போன வருஷம் அவரும் போய்ச் சேந்துட்டாரு. அவரு போனபிறகு இந்த அம்மாவுக்கு ஒண்ணும் புரியலே. எப்பவும் அழுதுக்கிட்டே உக்காந்திருப்பாங்க. அப்பப்ப மக வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க. மத்தபடி இங்கே உள்ள புள்ளைக விளையாடுறதை பாத்துக்கிட்டு இந்த திண்ணையிலயே உக்காந்திருப்பாங்க’’ என்று கண்கலங்குகிறார் சகுந்தலாவின் பக்கத்து வீட்டுக்காரரான வேலு.



‘‘இவங்க வீட்டுக்காரர் இறந்தபிறகு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ சங்கடம் வந்திடுச்சு போலருக்கு. அவங்க ரெண்டு பேருக்குள்ள பேச்சுவார்த்தை இல்லை. அதுவே இந்த அம்மாவை ரொம்ப பாதிச்சிருச்சு. குறிப்பா, மகன் வீட்டுக்குப் போகவே மாட்டாங்க. அவருதான் வந்து இவங்களப் பாத்துட்டுப் போவாரு. அவரை நினைச்சு எப்பவும் கவலைப்படுவாங்க. கொஞ்ச நாளாவே, ‘எனக்குன்னு யாரும் இல்லம்மா... இனிமே இருக்கிறது நல்லதில்லை. யாருக்கும் சங்கடமில்லாம போய்ச் சேந்திரணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நாங்கள்லாம் ஆறுதல் சொல்லுவோம். சாகுறன்னிக்கு மகளுக்குப் போன் பண்ணி, ‘மனசே சரியில்லம்மா... ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போ’ன்னு சொல்லியிருக்காங்க. அந்தப் பொண்ணு வர்றதுக்கு முன்னாடியே அவங்களா சுடுகாட்டுக்குப் போய் படுத்துக்கிட்டு, மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கிட்டாங்க. அவங்க வழக்கமா கட்டுற ஒரு சேலை பக்கத்துல கிடந்துச்சு. அடையாளம் தெரிஞ்சுக்கிறதுக்காக போட்டுருப்பாங்களோ என்னவோ. அதை வச்சுத்தான் கண்டுபிடிச்சோம்’’ என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த புவனா.

பிள்ளைகளின் புறக்கணிப்பும் தனிமையுமே சகுந்தலாவை சாவை நோக்கி உந்தித் தள்ளியிருக்கிறது. அந்த நிலையிலும், தன் பிள்ளைகளுக்கு எந்த சிரமமும் வைக்கக்கூடாது என்ற அவரது எண்ணத்திலும் உன்னதமான தாய்மை ததும்பி நிற்கிறது.

ad

ad