புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2013



தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 


      உவமைக் கவிஞர் என்று அனைவராலும் உவகையுடன் அழைக்கப்படும் கவிஞர் சுரதாவின் 90 வது பிறந்த நாளினையொட்டி( நவம்பர் 23) அன்று மாலை சுரதாவின் மொத்த நூல்களின் வெளியீட்டு விழாவினை சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடன் சிறப்புற நடத்தினார். இவ்விழா சென்னை அண்ணாசலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  

இவ்விழாவில், சீர்காழி கோ.சிவசிதம்பரம், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜன், குமரி அனந்தன், கவிஞர் வாலி, கவிஞர் கலி.பூங்குன்றனார், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கவிஞர் சுரதாவின் சிறப்பியல்புகளை எடுத்துக்கூறினர். அவர்களில் கவிஞர் வாலி மற்றும் இலக்கியச் செம்மல் குமரி அனந்தன் ஆகிய இருவரின் வாழ்த்துரையும் தனிச்சிறப்பாக அமைந்தது எனலாம். அவற்றின் சிறப்பு தொகுப்பு இதோ...  

தமிழ் ஞானம் இல்லா இசையமைப்பாளர்கள் - வாலி 

சுரதாவைப்பற்றி அனைவரும் அறிவர் என்பதால் அவருக்கும் எனக்குமான நட்பை பற்றி பேசுவதே உசிதமாயிருக்கும். நான் திருச்சிக்காரன். நான், அகிலன், சுகி.சுப்பிரமணியன் என்று நண்பர்கள் சிலர் சேர்ந்துதான் எப்போதும் நூலகத்திற்கு படிக்க போவோம். அப்போது, கவிஞர் திருலோகசீதாராம்தான் சுரதாவை எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். சுரதாவின் கவிதைகள் முதன் முதலாக திருலோகசீதாராமனின் சிவாஜி இதழில்தான் வெளிவந்தன. 

அதனையடுத்து, 1956 ல் சென்னையில் எனக்கு சுரதாவை
 அறிமுகப்படுத்தி வைத்தவர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸின் 
தனிப் பாடல் ஒன்றின் பதிவிற்காக அவரும், நானும் காரில் போய்கொண்டிருக்கும்போது, லஸ் ரவுண்டானாவில் அந்த வழியாக சுரதா நடந்து சென்றார். அப்போது ‘இவர்தான் சுரதா’ என்று டி.எம்.எஸ் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.   அதன்பிறகு சுரதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அடிக்கடி வாய்த்தது.  

‘மங்கையற்கரசி’ படத்தில் சுரதா எழுதிய உரையாடலை இப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்புகூட அந்தப் படத்தை பார்த்தேன். பி.யு.சின்னப்பாவின் கம்பீரக்குரலில் சுரதாவின் உரையாடல் அதியற்புதம். 

1968 ல் “சந்திரோதயம்” படத்தில் நான் எழுதிய ‘சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ’ என்ற பாடலை பாராட்ட என்வீட்டுக்கே வந்து பாராட்டினார். சுரதா நாத்திகர் என்கிறார்கள்.  ஆனால் அவர் மனிதநேயமிக்கவர். 

நான் அப்பலோவில் இதய அறுவைச்சிகிச்சை செய்து கொண்டபோது. ‘வென்டி லெட்டர் கார்ட்’ பயன்படுத்தியதால் எனக்கு குரல் பேசமுடியாமல்போனது. அப்போது என்னை சிறப்பாக கவனிக்க ஏற்பாடு செய்திருந்தார் கலைஞர். நித்தம் ஒரு அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் என்னை பார்க்க வருவார்கள்.

இனிமேல் என்னால் பேசவே முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். அப்போது அரசியல் தலைவர் ஒருவர், “உங்களுக்கு நிச்சயம் குரல் சரியாகிவிடும். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சரியாகிவிடும். நிச்சயம் இது நடக்கும் பயப்படாதீர்கள்” என்று என்னிடம் கூறினார்.  மேலும், அந்த நேரத்தில் என்னை அருகில் இருந்து பார்த்துக்கொண்ட பழனி பாரதியிடமும், “வாலியை தைரியமாக இருக்கச் சொல்லுங்க. எனக்கும் இது போலதான்,இதய அறுவை சிகிச்சையின்போது பேசமுடியாமல் போனது. அப்புறம் சரியாகிடுச்சு. அதேபோல், வாலிக்கும் சரியாகிவிடும்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் சொன்னதுபோல 6 மாதத்தில் எனக்கு சரியாகிவிட்டது. அவர் வேறயாருமில்லை கி.வீரமணிதான். எத்தனையோ ஆன்மிகவாதிகள் சொல்வதெல்லாம்கூட பலிப்பதில்லை. ஆனால் ஒரு நாத்திகர் சொன்னது பலித்துவிட்டது. ஆத்திகன், நாத்திகன் என்பது முக்கியமில்லை. அவர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம். “போலி ஆத்திகனைவிட, நிஜமான நாத்திகன் மேலானவன்” என்று விவேகானந்தர் சொல்லி இருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக 
கூறுவேன்.

நான் ஆத்திகவாதி என்றாலும் கலைஞரும் நானும் நெருக்கமானவர்களாக இருப்பதற்கு காரணம், நான் நானாக இருப்பதை அவர் அனுமதிக்கிறார். நான் அவரை அவராகவே ஏற்றுக்கொண்டுள்ளேன். 

சுரதாவின் உவமை சிறப்பை பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். பிறை நிலாவை, வெட்டி எறிந்த நகமாக உவமைப்படுத்தியுள்ளார். விலைமாது பற்றி குறிப்பிடும் போது, “பலரும் வந்து மிதிக்கும் படித்துறை” என்கிறார். இப்படி சுரதா சொல்லாத உவமையே கிடையாது. ஆனால் அவருக்கு உவமையாக சொல்லத்தான் ஒருவரும் இல்லை. 

நாடோடி மன்னன் படம் வெளிவந்த பிறகுதான், மின்னலின் ஒளியில்தான் தாழம்பூ மலரும் என்பதே நமக்கெல்லாம் தெரியும். அதற்கு காரணம் சுரதா. இதுபோன்ற எத்தனையோ அரிய கருத்துக்களை, யாரும் அறியா கருத்துக்களை உவமைப்படுத்தி இருக்கும் சுரதாவின் உயரிய கவிதை அவரது மகன் கல்லாடன் என்பேன்.

முனைவர் மு.பி.பா சொன்னதைபோல், ராஜேஸ்வரி கல்லாடனின் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதும்போது, என் மகளைப்போன்றவர் என்று குறிப்பிட்டதற்கு காரணம், அவர் சுரதாவின் மருமகள் என்பதினால் அல்ல.  ராஜேஸ்வரியின் சிறந்த கவிதைத் திறனுக்காக அப்படி எழுதினேன். 

சுரதாவின் திரைப் பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. அப்படி இருந்தும் சுரதாவினால் திரைத்துறையில் வெற்றியடைய முடியவில்லை. அதற்கு காரணம் அறிவாளிகள் யாரும் திரைத்துறையில் வெற்றிப் பெறமுடியாது. அது மிகவும் கடினம். நான் திரைத்துறைக்கு போகும் போது வெறும் வாலியாகத்தான் போனேன். இந்தத் திரைத்துறையில் பாட்டெழுத இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று இசை ஞானம். மற்றொன்று தமிழ் ஞானம். இவை இரண்டும் இல்லை என்றால் இன்னும் எளிதாக ஜெயித்துவிடலாம்

ஒரு முறை அப்துல்ரகுமான்,“எப்படிப்போகுது உங்கள் திரைப்பாடல் பணி” என்று கேட்டார். அதற்கு நான், “இன்று தமிழ் ஞானமும் தமிழ் ஆர்வமும் திரைத்துறையில் குறைந்துவிட்டது. ‘கன்னம்’ என்று எழுதினால்...இன்னும் எளிமையாக எழுதச் சொல்றானுங்க இப்போ இருக்கிற இசையமைப்பாளர்கள். நுதல் என்று எழுதியிருந்தால் நெற்றி என்று எளிய தமிழில் எழுதலாம். இதழ் என்று எழுதினால் உதடு என்று எழுதலாம். வதனம் என்றால் - முகம் என்றும்,  செவி என்றால் காது என்றும், விழி என்றால்கூட கண் என்று எழுதலாம். கன்னம் என்பதை இன்னும் எப்படி எளிதாக எழுதுவது?,” என்றேன். அதற்கு, கன்னத்தில ஒரு போடு போடவிட்டியும் தானே என்றார் அப்துல் ரகுமான். 

சுரதாவிற்காக தனி ஒரு ஆளாக நின்று சிலை எழுப்பினார் அவரது மகன் கல்லாடன். இன்று அவரது அனைத்து நூல்களையும் வெளியிட்டும் இருக்கிறார் தந்தைக்கு கடனாற்றும் மகன்.  இதேபோல்,  சுரதாவிற்கு சிலை எழுப்பி, அவரின் நூல்களை எல்லாம் நாட்டுடமையாக்கியுள்ளார் கலைஞர். 

கலைஞர் ஒரு மிகச்சிறந்த ரசிகர். அறிமுகமே இல்லாத, இப்போதுதான் முதன்முதலாக எழுத ஆரம்பிக்கும் கவிஞனின் கவிதையைக்கூட ரசிக்கக் கூடியவர். ஒரு முறை ராணி இதழில் “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே” என்ற பாடல்வரியைகொண்டு ஒரு கவிஞன் எழுதியது பற்றி, என்னிடம் கூறி வியந்து பாராட்டினார். 

விண்ணேடும் முகிலோடும் பாட்டுவரியில் என்ன புதுமை செய்திருக்க முடியும் என்று அந்த கவிதையை நானும் பார்த்தேன். “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் விலைவாசியே” என்று அதில் எழுதியிருந்தது. இதைத்தான் அப்படி ரசித்துப் பாராட்டினார் கலைஞர். 

தமிழுக்கும், தமிழ் மாண்புக்கும் இன்று புகழ் சேர்க்கும் ஒரே அரசியல் தலைவர் கலைஞர்தான். வேற யாராவது கலைஞர் அளவிற்கு, தமிழுக்கு சிறப்பு சேர்ப்பவர்கள் ஒருவரை காட்டுங்கள். நான் இப்போதே அவர்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன்.  

கம்ப ராமாயணத்தை வைத்து நான் எழுதிய “அவதாரப் புருஷன்” என்ற புத்தகத்தை விரும்பிப் படித்தார் கலைஞர். என்ன நீங்கள் போய் ராமயணத்தை இவ்வளவு விரும்பி படிக்கிறீர்களே. உங்களுக்கு ராமாயணம் பிடிக்குமா என்றேன். அதற்கு அவர், “யார் சொன்னது எனக்கு ராமாயணம் பிடிக்காது என்று. எனக்கு ராமயணத்து வாலியையும் பிடிக்கும். வாலியின் ராமாயணத்தையும் பிடிக்கும்” என்றார்.    
   
சுரதாவின் உவமைப்பற்றி குறிப்பிடும் போதெல்லம் , ‘சேறு’ பற்றி அவர் எழுதிய கவிதை ஞாபகத்தில் வரும். 

“சேறு -
பயிர் உண்ணும் கறுப்புச் சோறு” என்கிறார். 

புதுக்கவிதை எழுதுவதற்கு முன்பு மரபுக்கவிதையில் தேர்ச்சி பெறவேண்டும். முதலில் இலக்கணத்தை முறையாகக் கற்றுக்கொண்டு. பிறகு அதை மீறு என்கிறார் சுரதா. இன்று திரைத்துறையில் 17 ஆயிரம் பாடல்களை எழுதியிருந்தாலும். திரைப்படத்தை தாண்டி வெளியில் சுரதா அளவிற்கு தமிழுக்கு சிறந்த பதிவுகளை தரவில்லை என்றாலும், தமிழில் சிறந்த நூல்களையும் எழுதிவருகிறேன். அதனால் தான் என்னால் இந்த தமிழ் சான்றோர்கள் கூடிய அவையிலும் கைத்தட்டல் வாங்க முடிகிறது.அப்படி இல்லையெனில் இங்கு யாரும் என்னை ‘முக்காப்புல்லா’ எழுதியதற்காக பாராட்டுவதில்லை. அது திரைத்துறையளவுக்கு மட்டுமே. வெளியில் அதற்கு மதிப்பில்லை. இதுபோல் தமிழ் குறித்த பேச்சை வேறொரு இடத்தில் பேசியிருந்தால் ரசிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். நான் மட்டும்தான் தனியாக பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

என்னிடம் இரண்டு விதமான தமிழ் உண்டு. விற்பனைக்காக ஒரு தமிழ். கற்பனைக்காக ஒரு தமிழ்.

தமிழுக்கு தொண்டு செய்தவன் சாவதில்லை - குமரி அனந்தன்:

சுரதா தன் வாழ்வில் முக்கியமான நாளாக 1941 ஜனவரி 14 ல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகியது என்கிறார். பாவேந்தருடன் சுரதா சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் துணையாக இருந்துள்ளார். அவரின் மேல் கொண்ட பற்றினால்தான் தன்பெயரை சுப்புரத்தின தாசன் என மாற்றிக்கொண்டார்.

அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராகவும் இருந்தார் சுரதா. அவர் மிகுந்த பற்றுகொண்டிருந்த பாரதிதாசன் பேரில் பல்கலைக்கழகம் உள்ளது. நாமக்கல் கவிஞர் பேரில் மாவட்டமே இருக்கிறது .அதேபோல் சுரதாவின் பேருக்கும் அரசு சிறப்பு செய்தால் நன்றாக இருக்கும்.  

சுரதா உவமைப் பற்றி கூறும்போது, உவமை இல்லா பாடல் உப்பில்லா பண்டம் என்கிறார். உவமைக்கு உவமையாக உப்பை கூறியவர்... 

“ஆறுகள் அனைத்தையும் அலைகடல் கூப்பிடும்
உப்பை மட்டுமே ஓயாமல் சாப்பிடும்”  என்று உப்பைப் பற்றியும் பாடுகிறார்.
 
நாடோடி மன்னன் படத்தில், சுரதா எழுதியதை வைத்துதான் மின்னலினால், தாழை பூப்பதை அறிந்ததாக வாலி குறிப்பிட்டார். ஆனால், இது பற்றியத் தகவல் ‘குறுந்தொகையில்’ கூறப்பட்டிருப்பதாக சுரதாவே தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இது போல், கவிதை மட்டுமில்லாமல்,  அற்புதமான தகவல்களை ஆவணப்படுத்தி புத்தகமாக்கியுள்ளது சுரதாவின் தனிச்சிறப்பு. 

தமிழின் சொல்வளம் பற்றி குறிப்பிடும் சுரதா,

சந்தனம் இட்டு வைப்பதற்கு ‘கிண்ணம்’
தயிர் ஊற்றி வைப்பதற்கு ‘பானை’
வெந்தயம் கொட்டி வைப்பதற்கு ‘களையம்’, என்று தமிழ்ச் சொல்வளம் பற்றியும் அதன் பயன் பற்றியும் விளக்குகிறார். 

குற்றால அருவியை பாடும் கவிஞர், “பாம்பின் உறித்த சட்டை போல் பாயும் அருவி” என்கிறார்.

புத்தகம் இரவல் கொடுப்பது பற்றி சுரதா குறிப்பிடும்போது,

என்னருகே எப்போதும் புத்தகங்கள் இருப்பதுண்டு,
என்னைச்சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பதுண்டு,
பொன்னை கேட்டாலும் கொடுப்பேன் -ஆனால்
புத்தகத்தை கேட்டால் கொடுக்கமாட்டேன்!
கன்னியரையும் புத்தகத்தையும் இரவல் தந்தால்
கசங்காமல் வீடு திரும்புவதில்லை. 

புத்தகத்தை இரவல் தரமாட்டேன் என்பதை எவ்வளவு, நாசூக்காக நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கூறுகிறார். புத்தகம் விஷயத்தில் சுரதா மாதிரிதான் நேருவும். நான் ஆனந்தபவனில் நேருவை சந்திக்க போயிருந்தேன். அப்போது அவர், “எனக்கு புத்தகம் என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக ஒரு நூலகத்தையே உருவாக்கி இருக்கிறேன்.

இவ்வளவு புத்தகங்கள் என்னிடம் 
இருந்தாலும், நான் யாருக்கும் இரவல் தரமாட்டேன். இரவல் கொடுத்தால் திரும்பி வராது. நான் இதுவரை இரவல் வாங்கிய புத்தகத்தை நானே திருப்பித் தந்ததில்லை.அப்படி நான் திருப்பிக் கொடுக்காத புத்தகங்கள் எனது நூலகத்தில் நிறைய உண்டு. அந்த அனுபவத்தினாலேயே நான் யாருக்கும் இரவல் தருவதில்லை,” என்றார்.  

நான், கன்னி மாரா நூலகத்தில் பல புத்தகங்கள் அப்படியே ஒட்டிய பக்கங்கள் கூட பிரிக்கப்படாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது பற்றி நூலக காப்பாளரிடம், “ ‘கன்னி மாரா’ நூலகம் என்னும் பெயருக்கேற்ற மாதிரியே, இங்குள்ள புத்தகங்களும் யாருடைய கையும் படாததினால், ‘கன்னி மாறா’மலேயே இருக்கின்றனவே,” என்று.

மங்கையற்கரசியில் சுரதா எழுதிய உரை நடை,  நீர் குமிழியில் அவர் எழுதிய ‘ஆடி அடங்கும் வாழ்க்கையட’ என்ற பாடல், தைப்பொறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம்பெற்ற ‘அமுதும் தேனும் எதற்கு’ என்ற பாடல் போன்று திரைத்துறையில் அவர் ஆற்றியப் பணியும், தமிழுக்காக அவர் தந்துள்ள நூல்களும் என்றும் அவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.

தமிழுக்கு தொண்டு செய்தவன் சாவதில்லை. தமிழ்த் தொண்டன் பாரதிதாசனும் சாவதில்லை. அவர் தொண்டர் சுரதாவும் சாவதில்லை. சுரதாவின் கவிதைகள் பக்கத்தில் இருக்கையில் அமுதும் தேனும் எதற்கு.  அவை தேவையில்லை. 

தொகுப்பு :~ நா. இதயா , ஏனாதி...

ad

ad