புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013


கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே
துளையிட்டு மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆள்துளை கிணற்றில்  மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மீட்புப் பணியில் சிரமமும் ஏற்பட்டுள்ளது.
பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய் பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள்.
7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டாள்.அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது.. தகவல் கிடைத்து அந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் உடனடி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆழ்துளை கிணற்றில் சிறுமி சிக்கி இருப்பதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில்சிறுமி வீழ்ந்துள்ள பள்ளத்தின் அருகே 3 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பள்ளம் தோண்டப்படுகிறது.இதன் மூலம் சிறுமியை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் அசைவை கண்ணகாணிக்க கேமரா செலுத்தப்பட்டது. கேமரா காட்சிகள் பதிவினை ஆராய்ந்த போது குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்கு மேலாக ஆனதால் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீட்பு பணியில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி சத்தியநாராயணன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
முதல் காட்சிகள்:
ஆழ்துளை கிணறு தோண்டும் விதிகள்: உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்ன?
ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆழ்துளை கிணறு தோண்டுபவர் அதுகுறித்து 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அல்லது அவர் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தினர், அந்நிறுவனத்தை அரசிடம் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறு தோண்டும்போது அதற்கு அருகில் கிணறு தோண்டுவது குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில் கிணறு தோண்டுபவரின் முகவரி மற்றும் கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தின் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
கிணறு தோண்டியதும் அதைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும்.மேலும் கிணற்றைச்சுற்றி கான்கிரீட் மேடையையும் அமைக்க வேண்டும்.
கிணற்றின் வாய்ப்பகுதியை இரும்பு பிளேட் கொண்டு மூட வேண்டும்..கிணறு தோண்டி முடித்ததும் அந்த பகுதியை சுற்றி ஏற்படும் குழியை முற்றிலும் மூட வேண்டும்.
பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை அதன் அடிப்பாகம் வரை மண்ணிட்டு மூட வேண்டும். இந்த வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்.
இது வரை இந்தியா முழுவதும் நடைபெற்ற சில ஆழ்துளைக் கிணறு விபத்துக்கள்
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரியானாவில் குருஷேத்ரா என்ற இடத்தில் பிரின்ஸ் என்ற 5 வயது சிறுவன், 60 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 48 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே டோக்ரா கிராமத்தில் சோனு என்ற இரண்டரை வயது குழந்தை 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. 98 மணி நேர போராட்டதுக்கு பிறகு இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜஸ்தானில் 4 வயதான அஞ்சு குஜரார் 70 அடி கிணற்றில் விழுந்தாள், 19 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வாரங்கல்லில் தராவத் மகேஷ் என்ற 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியானது.
2011ம் ஆண்டு மே மாதம் நாசிக்கில் ஓம் சந்தோஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் சுதர்சன் என்ற சிறுவன் பலியானான்.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தூரில் பயால் என்ற குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. அதே ஆண்டு ஜூன் மாதம் அரியானாவில் குர்கான் அருகே, ஐந்து வயது சிறுமி மஹி 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தாள்.85 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

ad

ad