புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

ராஜீவ் கொலை..!விடுபடாத மர்மங்கள்..! மீண்டும் விசாரிக்குமா சி.பி.ஐ.? - மதுரை நீதிமன்றம் -விகடன் 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னமும் வெளிவராத தகவல்கள், விடை தெரியாத சந்தேகங்​கள் நிறைய இருக்கின்றன. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, சி.பி.ஐ. இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது, இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு பொது நல வழக்குகளைத் தொடர்ந்த ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.சாந்த குமரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலை நடந்த சமயத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பிரபலமான தலைவர்​களை ஒழிக்க, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பு நடவடிக்கை எடுத்து வந்தது.
ராஜீவ் காந்தியே தன்னுடைய கடைசிப் பேச்சில், 'பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா-உல்-ஹக் உள்ளிட்ட 20 ஜெனரல்களைக் கொலைசெய்தது அமெரிக்கா​தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத், பிரதமர் சந்திரசேகரிடம் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து எல்லாம் எந்த விசாரணையும் நடத்தப்​படவில்லை.
வெடிகுண்டுடன் வந்த தனு, சிவராசன், சுபா ஆகியோரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லதா பிரியகுமார் என்பவர்தான் அதே கட்சியைச் சேர்ந்த லதா கண்ணனிடம் அறிமுகம் செய்துவைத்துள்ளார். தனுவை மேடைக்கு அருகில் அழைத்துச் சென்றது லதா கண்ணன். ஆனால், இவர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. லதா பிரியகுமார், இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனேயின் உறவினர். சிவராசனின் மனைவி, பிரேமதாசாவின் உறவினர். இதுபற்றியும் விசாரணை நடத்தப்படவில்லை.
பெங்களூருவில் சிவராசனுக்கு வீடு கொடுக்கும்​படி பரிந்துரைசெய்தது, முன்னாள் மத்திய மந்திரி மார்க்ரெட் ஆல்வா’ என வீட்டின் உரிமையாளர் ரங்கநாதன் கூறியுள்ளார். ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணத் திட்டங்களை வகுத்தவரும் மார்க்​ரெட் ஆல்வாதான். அவரிடமும் விசாரணை நடத்தப்​படவில்லை.
ராஜீவ் கொலை குறித்து சுப்பிரமணிய சுவாமி, சந்திரசாமி ஆகியோரின் பேச்சு மற்றும் பேட்டிகள் அடங்கிய ஒலிப்பேழைகள், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அலுவல​கத்தில் இருந்து மாயமாகின. இதுகுறித்தும் விசாரிக்கவில்லை.
ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்கள் எந்த நேரமும் தூக்கில் போடப்படலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கு முன் எனது மனுவில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.செல்வம், பி.தேவதாஸ் அடங்கிய பெஞ்ச் முன்னிலை​யில் 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வரும் 5-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. இயக்குனர், ரா இயக்குனர், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, சாந்த குமரேசனின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ''ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர், 'மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் தூக்கில் போடாமல் இருந்தால் சந்தோஷம்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மூன்று பேரின் தண்டனையை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி.தாமஸ், ஓய்வுபெற்ற பிறகு அதே கருத்தைத் தெரிவித்தார். ஆக, விசாரித்த​வர்களுக்கே இதில் உறுத்தல் இருப்பது தெரிகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேர் மற்றும் வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.
மற்றவர்களைப் போல ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது. அப்பாவிகளைக் காப்பாற்றி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனைப் பெற்றுத்தருவதுதான் எங்கள் பிரதான நோக்கம்'' என்றார்.
உண்மை வெளியில் வரட்டும்.

ad

ad