புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013





              ஜூலை 1. அம்பிகாபதி திரைப்படத்தின் நைட் ஷோவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். செல் போனில் ஒரு அழைப்பு வந்தது "இளவரசன்' என்ற பெயரில்.



"அண்ணே... எங்கண்ணே இருக்கீங்க...'

"வளசரவாக்கம் தம்பி..'

"அண்ணே... அந்த பொண்ணு என்ன விட்டு போயிட்டாண்ணே...' -அதிர்ச்சியானேன்.

"ஏன் போனா...?'

"தெரியலையே... என்கூட இருக்குற வரைக்கும் நல்லாதான் இருந்தா. எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இல்ல...'

சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்... அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"ப்ண்ச்ங் ரொம்ப முக்கியம் தம்பி. இதுக்கப்புறம் உன் வாழ்க்கைய பத்தி யோசிக்கணும். தப்பா எதுவும் பண்ணிக்க மாட்டல்ல...'

"அதெல்லாம் பண்ணமாட்டேன்ணே. ஒருத்தங்க வேலை வாங்கித் தரேன்னு சொல்லி இருக்காங்க. ஆனா அந்தப் பொண்ணு இல்லாம இருக்க முடியாதுண்ணே.'

இரண்டு நாட்கள் கழித்து இளவரசன் ரயிலில் விழுந்து மரணம் என்று செய்தி படித்தேன்.. குற்ற உணர்ச்சியும், இளவரசன் பகிர்ந்து கொண்ட நினைவுகளின் சுமையும் அதிகமானது.

(திரைப்படம் இயக்கும் கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் உலவி வரும் எத்தனையோ உதவி இயக்குனர்களில் நானும் ஒருவன். தேசாந்திரியாக ஊர் ஊராக சுற்றி, மனிதர்களுடன் பழகி, கதைகள் தேடி அலைந்துகொண்டிருந்த சமயம். ஒரு சாதிக் கலவரத்தில் சிதைந்து போன ஊரில் எனக் கான கதைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இரண்டு மாதங்களுக்கு முன் தர்மபுரி நத்தம் காலனிக்கு சென்றேன். புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளில் மனிதர்களுடன் பழகினேன். ஒரு காதல் எப்படி அரசியலானது என்ற காரணியை கண்டுப் பிடிக்கும் தேடல் தொடங்கியது. இளவரசன் தரப்பை சார்ந்தவர்களையும், திவ்யா தரப்பபை சார்ந்தவர்களையும் சந்தித்தேன். பல நாட்களாக நீண்டுகொண்டிருந்த பயணத் தில் "ஏதோ ஒன்று'  என்னை கருவியாக நடத்திச் சென்றது என்பது மட்டும் உண்மை. "அது' ஒருநாள் என்னை இளவரசனையும் சந்திக்க வைத்தது. இன்று "அது'வே என்னை இளவரசனின் கதையையும் எழுத வைக்கிறது).




இளவரசன் குரலிலிருந்து :


ஒரு சராசரி இளைஞனாக ஊரில் சுற்றித் திரிந்தவன் நான்.

ஒரு பெண்ணை பார்த்து காதல் வயப்பட்டு, நான் அவளுடன் எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அந்த கனவுகளை சிதைத்தது யார் குற்றம்?

அதைத் தெரிந்துகொள்ள, எனது ஊரின் வரலாறில் இருந்தே தொடங்க வேண்டும். எனது ஊர் தர்மபுரி, நாயக்கன்கொட்டாயை சேர்ந்த நத்தம். 1980-களில் நத்தத்தில் பாலன் தலைமையில் உருவான நக்சல்பாரிகள்  அமைப்பின் சார்பில், ஊதியம் வாங்காமல் உயர்சாதியினருக்கு ஊழியம் செய்வதும், இறந்த மாட்டினை தூக்குவதும் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும், கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்களையும், ரவுடித்தனம் செய்தவர்களையும் அமைப் பில் இருந்தவர்கள் தண்டித்ததாகவும் கூறுவார்கள். பொடா வழக்கில் நத்தத்தி லிருந்து சிலர் கைது செய்யப்படும் அளவிற்கு, கம்யூனிச புரட்சிக்கு புகழ் பெற்ற ஊர்.. எத்தனையோ கலப்பு திருமணங்கள் நடை பெற்ற ஊர்.

ஆனால் நதிக்கு அடியிலே பதுங்கிக் கிடக்கும் சுழலைப் போல, எல்லோர் மனதிலும் சாதி பதுங்கிக் கிடக்கிறது என்பதை, அந்த சுழலில் சிக்கும் போது தெரிந்து கொண்டேன்.

திவ்யாவை முதல்முறை எப்போது பார்த்தேன் என்றால்... சிறு வயதில்,  நாயக்கன் கொட்டாயில், அம்மன் ப்ரைமரி நர்சிங் ஸ்கூலில் நானும் திவ்யாவும் எல்.கே.ஜியில் ஒன்றாக படித்தபோது.

நாயக்கன்கொட்டாய் கூட்டுறவு வங்கி யில் திவ்யாவின் தந்தை நாகராஜன் கேஷியராக பணியாற்றினார். திவ்யா தினமும் வகுப்பு களில் உட்காராமல், பள்ளியின் அருகி லிருக்கும் அவள் தந்தையின் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று அமர்ந்துகொள்கிறாள் என்பதால் அவளை 5 கி.மீ. தள்ளி இருக்கும் கார்மேல் பள்ளியில் சேர்த்துவிட்டார் அவர் தந்தை.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் பதி னைந்து கிராமங்களில் இருந்து நாயக்கன் கொட்டாய் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நத்தம்  வழி யாகத்தான் செல்ல வேண்டும். இளம் வயதில் என் வீட்டின் சாலை வழியாக, தன் தாயுடன் நடந்து செல்லும் அவளை எப்போதேனும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவள் மேல் எனக்கு எந்த உணர்வும் ஏற்பட்டதில்லை.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு நடந்த சமயம். எனக்கு தர்மபுரி அதியமான் ஆண்கள் பள்ளியை சென்டராக போட்டிருந்தார்கள். வேறு பள்ளியில் படித்த திவ்யாவிற்கும் மற்றும் எங்களுக்கு பொதுவான பல நண்பர்களுக்கும் அந்த பள்ளிதான் சென்டராக இருந்தது. பரீட்சை முடிந்ததும் தர்மபுரியிலிருந்து நாயக்கன் கொட்டாய்க்கு நண்பர்கள் அனைவரும்  பேருந்தின் பின் வரிசையில் அமர்ந்து, அரட்டை அடித்து கொண்டு திரும்புவது வழக்கம். எங்களுடன் திவ்யாவும் வருவாள்.

திவ்யா என் நண்பன் சதீஷின் பெரியப்பா மகள் என்பதால் அவளை நண்பனின் தங்கையாகவே பார்த்தேன். மேலும் பெண்களிடம் சீன் போடுவது எனக்கு பிடிக்காது என்பதால், அவளிடம் மிக இயல்பாக பேசினேன். அவ்வாறாகவே நானும் திவ்யாவும் முதல் முறை பேசிக் கொண்டோம்..

திவ்யாவின் சாதியை சேர்ந்த நண்பர்கள்தான் எனக்கு அதிக நெருக்க மாக இருந்தார்கள். நட்புக்குள்ளே நாங்கள் சாதிப் பார்த்தது கிடையாது. அதில், என்னையும் திவ்யாவையும் பார்த்த ஒருவன் கூறினான்:

"அந்தப் புள்ளய லவ் பண்றதா இருந்தா பண்ணுடா.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.. அவங்க வீட்டுக்கு கூட கூட்டிட்டு போறேன்...'‘

"எனக்கு அந்த மாதிரி எண்ணமெல் லாம் வரல. அது நல்ல பொண்ணு. இந்த மாதிரி குழியிலலாம் தள்ளாத... நான் என் வேலைய பாக்கறேன்'.’

அப்போது அவனிடம் மனதார கூறினேனா என்பது தெரியவில்லை. 

ad

ad