புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013

தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பு(டெசோ)
 கூட்டத்தின் 5 தீர்மானங்கள

16-7-2013 அன்று  காலை  10 மணியளவில்  சென்னை -  அண்ணா அறிவாலயத்தில்  தமிழ் ஈழம் ஆதரவா ளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பி னர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி,  விடுதலை
சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  சுப்புலட்சுமி ஜெகதீசன்,  பேராசிரியர் சுப. வீரபாண்டியன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்,  நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர்  டி.ஆர். பாலு,  அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., கலி. பூங்குன்றன், ரவிக்குமார், வழக்கறிஞர்கள்  கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விரிவான விவாதத்திற்குப் பிறகு  பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
 


தீர்மானம் - 1. 
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1987ஆம் ஆண்டு  ஓர் உடன்பாடு ஏற்பட்டது.  அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும்,  இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே அவர்களும்  கையெழுத்திட்ட அந்த உடன்பாட்டின்படி,  மாகாண கவுன்சில்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழி வகை செய்யும் வகையில்  இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில்   13வது திருத்தம் செய்யப்பட்டது.  ஆனால் இன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு  அதை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல்,  நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்,  இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை உருக்குலைத்திட நடக்கும் முயற்சிகள் குறித்து அறிந்திருப்பதாகவும்,  இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங்களைச் சேர்ந்த மக்கள் சமமாகவும் சுயமரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகச் சட்டப் பேரவையிலேயே தீர்மானம் நிறைவேற்றிய   ஜெயலலிதாவே தற்போது அவற்றையெல்லாம் மறந்து விட்டு,  இலங்கையிலே 13வது திருத்தம் நீர்த்துப் போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்று; இப்போது பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதுகிறார் என்றால், இலங்கைத் தமிழர்களின்  பிரச்சினை எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
  இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சில நாட்களுக்கு முன்  இலங்கைக்குச் சென்று,  இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களைச் சந்தித்ததின் தொடர்ச்சியாக இலங்கையிலே உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும்  சமத்துவம், சமநீதி, சுயமரியாதையுடன் வாழ வேண்டும்;  இதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது.

அந்த வகையில் இலங்கையில் (இனப் பிரச்சினையில்)  விரைவான அரசியல் தீர்வு காண்பதற்கு,  13வது  அரசியல் சட்டத் திருத்தத்துக்கும் கூடுதலாக, இந்திய அரசுக்கும், சர்வ தேச சமுதாயத்துக்கும்  அளித்த வாக்குறுதியினை  இலங்கை பின்பற்றி அதிகாரப் பகிர்வு வழங்குவது அவசியம்;  இதை இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் சிவசங்கர் மேனன் இந்தியாவின் சார்பில்  வலியுறுத்தியுள்ளார்.  வடக்கு மாகாணத்தில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நம்பத் தகுந்த விதத்திலும் நடத்தப்படும் என நம்புகிறோம்.    இந்திய மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்தும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் பேசப்பட்டுள்ளது.
 எந்த நிலையிலும் வன்முறையில் இறங்காமல் மனித நேய அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    ஆனால் இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் காப்பாற்றாத இலங்கை அரசு, தற்போது சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதி மொழியை  எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பது தான் கேள்விக்குறியாகும். 


1987ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்ட  ஒப்பந்தத்தில், தற்போதைய இலங்கை அரசு இந்தியாவின் அனுமதியின்றித் தன்னிச்சையாகத் திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாக,  இலங்கை அதிபர் இராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் இராஜபக்சே தெரிவித்திருக்கிறார். மேலும்,  13வது சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தினை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோதரரும்  - இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சேவும் வெளிப்படையாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். 
  இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள், இலங்கையின் பூர்வக் குடிமக்களாக விளங்கிய போதும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதப்படுகிற இன்றைய  நிலைக்கு எதிராக நடத்திய பல்வகை தொடர் போராட்டங்கள் பயன்தராத நிலையிலும்,  இலங்கை அரசின் அடக்குமுறை காரணமாகவும், இலட்சக்கணக்கானோர் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழவும், மேலும் பல இலட்சக் கணக்கானோர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து வாழவும் வேண்டியிருக்கிறது.


இந்தச் சூழலில் அகதிகளாக ஏறத்தாழ மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியேறியதால், அவர்களைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு இந்திய அரசுக்கு ஏற்பட்டது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் உரிமைகளோடும் பாதுகாப்போடும் வாழும் நிலை ஏற்பட்டால்தான் இந்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் பொறுப்பிலிருந்து இந்தியா விடுபட இயலும் என்ற நிலையில் இரு நாடுகளின் நன்மையைக் கருதி ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தில், பிரிவு 2.14ன்படி “thr government of india will underwrite and guarantee the resolutions and co-perate in the implementation of these proposalr” அதாவது, “இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதற்குப் பொறுப்பேற்கவும், உறுதியளிக்கவும், ஒத்துழைக்கவும் இந்திய அரசு ஒப்புக்கொள்கிறது” என்று இலங்கையோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே இந்திய அரசு கையொப்பமிட்டுள்ளது.   
இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மீறுவதற்கோ திருத்தம் செய்வதற்கோ எந்த ஒரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது. காரணம், மேற்படி ஒப்பந்தத்தில் இந்திய நாட்டின் நலனும் அடங்கியுள்ளது.   இந்தச் சூழ்நிலையில், பசில் ராஜபக்சேயின் அறிவிப்பு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு எதிராக அமைந்துள்ளது.
13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான்,  “டெசோ” அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும்  தற்காலிகத் தீர்வாகவாவது,  ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று “டெசோ” அமைப்பு கருதுகிறது.
மேலும், இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.  எனவே, இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு, எந்தவித திருத்தங்களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று “டெசோ” அமைப்பின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீ ர் மா ன ம்  2.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், ‘டெசோ’ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும், இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்  தமிழகத் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும்,  தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்திய பிறகும்;  


“டெசோ” இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் துhதுவர்களை யெல்லாம் சந்தித்து, வேண்டுகோளையும் அதற்கான விளக்கத்தையும்  அளித்த பிறகும்;  கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத்  தெரிவிக்கப்பட்டு விட்ட பிறகும்;    பல்வேறு மனித உரிமை அமைப்புகள் -  குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்த பிறகும்;  காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு  ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்த பிறகும்;  


காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகும்; இலங்கையிலே அந்த மாநாடு நடைபெறுவது உறுதியாகி விட்ட நிலையில் -  காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்;  அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகி விடக் கூடுமென்றும்;  வலிமையான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருவதால்,  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்  இந்தியா  நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால்,  அங்கே நடைபெற்ற இனப்படுகொலைகளை இந்தியா ஏற்றுக்கொள்வது  போலாகி விடும்.  அம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது எனும் அழுத்தமான வேண்டுகோளை தொடர்ந்து நாம் “டெசோ” சார்பில் வலியுறுத்தி வருகிறோம். 


தமிழக மக்களும்  மற்றும் உலகத் தமிழர்களும் ஒருமுகமாக முன் வைத்திடும்  இந்த வேண்டுகோளை  இந்தியா ஏற்று -  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்  இந்தியா கலந்து கொள்ளாது  என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டுமென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம் - 3.
இந்திய மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும்,  தமிழக அரசின் சார்பிலும்  எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும்,  இலங்கைக் கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லை.  
 இத்தகைய கொடுமையான நிகழ்வுகள்  கடந்த பல ஆண்டு காலமாகவே தொடர் கதையாக நீடித்துக் கொண்டே வருகின்றன. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 29-11-2011 முதல்  இலங்கை  நீதி மன்றக் காவலிலே கைதிகளாக இருந்து வருகிறார்கள்.   அவர்களை விடுவிக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறவில்லை.     கடந்த 5-6-2013  அன்று கைது செய்யப்பட்ட 49 மீனவர்கள்,  ஒரு மாதம் இலங்கையிலே சிறையிலே வைக்கப்பட்ட பிறகு 2-7-2013  அன்று 24 மீனவர்களும்,  3-7-2013 அன்று 25 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 15-6-2013 அன்று கைது செய்யப்பட்ட  8 மீனவர்கள் இலங்கைச் சிறையிலே இன்னமும் இருந்து வருகிறார்கள்.   ராமேஸ்வரம்,  மண்டபத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கைச் சிறையில் வாடுவதாகவும், இலங்கை கடற்படையினர் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 11 முறை பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதன் காரணமாக தமிழக மீனவர்கள் பலர் கடும் காயமடைந்துள்ளார்கள் என்றும், இலங்கை அரசால்  பொய் வழக்குகள்  புனையப்பட்டு  தங்கச்சிமடம் மீனவர்கள் 7 பேரும், நாகை மீனவர்கள் 3 பேரும் கடந்த  இரண்டாண்டுகளுக்கு மேலாக இலங்கைச் சிறையிலே வைக்கப் பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன. 
ராமேஸ்வரத்திலிருந்து 13-7-2013 அன்று 600க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடிப்பு   படகுகளைச் சுற்றி வளைத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையெல்லாம் கொள்ளையடித்ததோடு வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்திருக்கிறார்கள்.  மேலும் படகுகளில் இருந்த மீனவர்களை இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள்.   இந்த ஆண்டு மட்டும்  ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை ஏழு மாதங்களில் நாகை, காரைக்கால், மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 169 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.  
 ஒவ்வொரு முறை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படும் போதெல்லாம்,  தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், “டெசோ” அமைப்பின் சார்பில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும்,  தமிழக அரசின் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும்  எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.  மீனவர்கள் சங்கங்களின் சார்பில் டெல்லி சென்று கடந்த வாரம் ராஜபக்சேயின் சகோதரர்  பசில் ராஜபக்சே அவர்களையும், திருமதி சோனியா காந்தி அவர்களையும் நேரில் சந்தித்து இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் அத்துமீறல்களை யெல்லாம் முறையிட்டதற்கு பிறகும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சிறிதும் குறையவில்லை.    எனவே  மத்திய அரசு இனியாவது உறுதியானதொரு நடவடிக்கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டுமொத்தமாக தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.  
தீ ர் மா ன ம் -  4. 
இலங்கையில் பன்னெடுங்காலமாகத்  தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியேற்றும்  கொடுமை தொடர்வதைப் பற்றியும், தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப் பற்றியும்,   தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை நிரூபித்திடும் வண்ணம், வடக்கு மாகாணத்தில் உள்ள  வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள  திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டித் திடும் வகையிலும்,  சிங்களப் பகுதியான அனுராதபுரா மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும்,  “வெளிஓயா” என்ற சிங்களப் பெயரிலேயே  ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி,   அங்கே சிங்களவர்களை மட்டுமே  குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும்  தற்போது நடைபெறுவதை, “டெசோ” இயக்கம் சுட்டிக்காட்டி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற் றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, பொதுத் தேர்தல்கள் நடைபெறும் காலத்தில்  இதுபோன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்படுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு,   இதனை உலக நாடுகள், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டுமென்று,   இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.  

தீ ர் மா ன ம் - 5. 
 நிறைவேற்ற வலியுறுத்தியும்,  இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,  தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,  இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும்  நிறைவேற்றப்பட்டுள்ள    நான்கு  தீர்மானங்களையும்,  தமிழக  மக்களின்  கவனத் திற்குக் கொண்டு செல்லவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக  இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்,  சிங்கள  ஆதிக்க வெறிக்கு  எதிராக  தமிழர் எழுச்சியைஒன்று திரட்டவும்,   “டெசோ”  இயக்கத்தின்  சார்பில்  வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி  வியாழக் கிழமை  காலை 10 மணியளவில்,  தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில்,  “தமிழர் பெருந்திரள்  ஆர்ப்பாட்டம்”  நடத்துவதென  “டெசோ”வின்  இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது. 

ad

ad