-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

4 ஜூலை, 2013

,

பொலிவியா அதிபர் விமானத்தில் தப்பித்தாரா ஸ்னோடென். அவசரமாக தரையிறக்கி சோதனை.

அமெரிக்காவின் உளவு செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தற்போது ரஷ்ய நாட்டின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இவர் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு கோரிக்கை அனுப்பி இருந்தார். இதில் பொலிவியா நாடும் ஒன்று. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின் பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மொராலெஸ் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டார். இந்த விமானத்தில் ஸ்னோடென் தப்பிச் செல்வதாக தகவல் பரவியது. இதனால் பிரான்ஸ் மற்றும் போர்த்துக்கல் நாடுகளில் இந்த விமானம் பறக்க திடீர் தடை விதித்தன. இதன் காரணமாக பொலிவிய அதிபரின் விமானம் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா விமான நிலைத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
அங்கு விமானம் சோதனையிடப்பட்டது. அதில் ஸ்னோடன் இல்லை என்பதை ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன் பிறகு விமானம் பறக்க அனுமதி வழங்கப்பட்டது.  
 
இது குறித்து பொலிவியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கூறுகையில், ‘ஸ்னோடென் அதிபர் விமானத்தில் தப்பிச் செல்கிறார் என்ற பொய்யை யார் பரப்பிவிட்டார் என்று தெரியவில்லை. இந்த செயல் எங்கள் அதிபரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் எங்கள் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.‘ என்றார். 
 
மேலும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ரூபன் சவேத்ரா கூறுகையில்,‘ போர்த்துகல் நாடு அதிபர் விமானம் தரையிறங்க அனுமதி  மறுத்தது மற்றும் பிரான்ஸ் வான் எல்லையில் பறக்க அனுமதி மறுத்தது இவற்றுக்கு பின் அமெரிக்காவின் வெளியுறவுத் துறையின் பங்கு உள்ளது. பொலிவியாவையும் அதன் அதிபரையும் அச்சுறுத்தவே, அமெரிக்க இந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளையும் பயன்படுத்திக் கொண்டுள்ளது.‘ என்று கூறினார்.

விளம்பரம்