புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

வடமாகாண சபையை நாம் ஆளாவிடின் தமிழனத்துரோகிகளே ஆள வேண்டி நேரிடும் -வினோ எம்.பி

13ஆவது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழினம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. எங்கள் இழப்புகளுக்கும்
தியாகங்களுக்கும் இச்சபையை ஆள்வதன் மூலம் தீர்வு வரப்போவதில்லை. ஆனால் இச்சபையினை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆளவில்லையெனில் தமிழின துரோகிகளே ஆள நேரிடும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,
தமிழினம் கண்ட கனவுகளின் முதலாவது அத்தியாயத்தை எதிர்வரும் 21ஆந் திகதி ஆரம்பிப்பதற்கு தமிழினம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
வட மாகாண சபை தேர்தலில் நாம் போட்டியிடவில்லையென்றால் தமிழின துரோகிகளாலேயே இச்சபை ஆளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். கடந்த யுத்தத்தில் எமது இனம் இழந்ததை விட இச்சபை அவர்களின் கைக்கு செல்லுமாகில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் நாம் இழக்க வேண்டி வரும்.
தமிழனம் இழந்துள்ள சூழலில் ஆளக்கூடிய ஒரே சபை வட மாகாண சபை மட்டும் இதனை ஆளுவதற்கு உங்களின் ஆதரவை கேட்டு நிற்கின்றோம்.
எம்மால் வட மத்திய மாகாண சபையையோ தென் மாகாண சபையையோ ஆள முடியாது. எமக்கு இருக்கிற ஒரே சபை வட மாகாண சபை மட்டுமே. கிழக்கு மாகாண சபையை தமிழ் முஸ்லிம் இணைந்து ஆளக்கூடிய வாய்ப்பினை முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து விட்டது. ஆனால் இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியின் பின் இணைந்த வட கிழக்கு மாகாண சபையை ஆள முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்.
மன்னாரில் எப்படி தமிழ் முஸ்லிம் மக்கள் பிரிந்து வாழ முடியாதோ அதே போன்று வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களும் இணைந்தால் தான் எங்கள் மண்ணிலே நிலையான சமாதானம் கிட்டும். மன்னார் மாவட்டத்தில் இளம் வேட்பாளர்களை நாம் களம் இறக்கியுள்ளோம். மன்னாரை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பை இவர்களிடம் ஒப்படைக்கின்றோம். போராட்ட குணம் படைத்த துடிப்பான உறுதியான இளைஞர்களால் எமது மாவட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதில் எமக்கு ஐயமில்லை.
மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தமிழ் முஸ்லிம் உறவுகளில் விரிசலை உருவாக்குவதாகவே உள்ளது. இவற்றுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

ad

ad