புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013

தயா மாஸ்டர் நீக்கப்பட்டது ஏன்?
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான, வேட்பாளர் பட்டியல்கள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலேயே ஈ.பி.டி.பி. போட்டியிடப் போவதாக அறிவிப்பதற்கான சந்திப்பே அது.
டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் பரவலாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
இறுதிவரை பொறுத்திருக்கும் படியும், வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
உண்மையில், ஈ.பி.டி.பி.யின் வேட்பாளர்களில் அப்படியானதொரு அதிர்ச்சியை கொடுக்கக் கூடியவர்களாக யாரும் இருக்கவில்லை.
ஈ.பி.டி.பி.யில் எதிர்பார்க்கப்படாத ஒரு வேட்பாளர் சுந்தரம் டிவகலாலா தான்.
முன்னாள் நிர்வாகசேவை அதிகாரியான அவர், கடைசியாக வடக்கு, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
போர் முடிவுக்கு வந்தவுடனேயே, மாகாண சபை ஆசனம் மீது குறிவைத்திருந்தவர்.
அதற்காக சிலரை அணிதிரட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்பதற்கான எத்தனங்களை நீண்டகாலத்துக்கு முன்னரே மேற்கொண்டவர்.
ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டு கொள்ளாமல் போனதால், கடைசியாக ஈ.பி.டி.பி. பக்கம் போய் சேர்ந்து தனது மாகாண சபைக் கனவை நனவாக்க முயன்றுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கூறிய அதிர்ச்சியான தகவல், டிவகலாலா பற்றியது அல்ல. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து தயா மாஸ்டர் நீக்கப்பட்டது தான் பரபரப்பான- அதிர்ச்சியான செய்தியாக அடிபட்டது.
இவர் அரசதரப்பின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டத ற்கு டக்ளஸ் தேவானந்தாவின் நெரு க்குதலே காரணம் என்ற பரவலான கருத்து இருந்த போதிலும், அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த வாரம் நிராகரித்துள்ளார்.
எனினும், தயா மாஸ்டர் நீக்கம் பற்றிய தகவலை அவர் முன்னரே அறிந்திருந்தார் என்பதையே, அவர் கூறிய அதிர்ச்சியான செய்திக்கு காத்திருங்கள் என்ற கருத்து உறுதிப்படுத்துகிறது.
முன்னர், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்பட்டிருந்த தயா மாஸ்டர், ஆளும் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கமும், அவரை நன்றாகவே நம்பவைத்து கழுத்தறுத்து விட்டன என்பதே உண்மை.
ஏனென்றால், தயா மாஸ்டருக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, உச்சியில் ஏற்றிவிட்டு குப்புறத் தள்ளிவிட்டது அரசாங்கம் தான். எதற்காக அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டது? - ஏன் அவர் ஒதுக்கப்பட்டார்? என்ற கேள்விக்கான சரியான பதில் இதுவரை இல்லை. அவரைத் தேடிச் சென்று அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று இழுத்து வந்த அரசாங்கமே, கடைசி யில் அவரைப் பொருத்தமற்றவர், தகைமையற்றவர் என்று ஒதுக்கித் தள்ளி விட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகம் ஒன்றில் பணியாற்றி வந்த, தயா மாஸ்டரை சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட இழுத்து வந்தது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்க முன்னரே இவரை அரசியலுக்கு இழுத்து வரும் நகர்வை மேற்கொண்டிருந்தார் கோத்தபாய.
அதன் தொடர்ச்சியாக, தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அந்தக் கட்சியில் போட்டியிட முன்வந்ததாகவும், அதற்காகவே அந்தக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும், தயா மாஸ்டர் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.
ஆக, சுய அரசியல் ஆர்வத்தினால் அவர் இந்த அரங்கிற்கு வரவில்லை, அரசாங்கத்தினால் இழுத்து வரப்பட்டிருந்தார் என்பதே உண்மை.
இவரை மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின், முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன், முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஆகியோரையும், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இழுத்து வர முயன்றது அரசாங்கம்.
ஆனால் அவர்களெல்லாம், சாதுரியமாக ஒதுங்கிக் கொண்டதால், தயா மாஸ்டரைப் போன்ற நிலைக்கு உள்ளாகாமல் தப்பிக் கொண்டனர்.
சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், தயா மாஸ்டர் முன்னாள் போராளிகள் பலரையும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முயன்றபோதிலும் அதுவும் கைகூடவில்லை.
கடைசியில் அவர் ஒருவரே, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்ற அடைமொழியுடன் அரச வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
வேட்பாளர் நேர்முகத் தேர்வு முடிந்த பின்னரும், அவர் ஒருவரே, அரசதரப்பில் போட்டியிடவுள்ள முன்னாள் போராளி என்று அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம் ஜெயந்த் போன்றவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் கடைசியில் சுதந்திரக் கட்சியின் பட்டியலில் அவரது பெயர் இருக்கவில்லை.
அவர் அதில் இடம்பெறாத தகவலைக் கூட கட்சித் தலைமை, சக வேட்பாளரும், யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் மூலமே தெரியப்படுத்தியது.
அரசாங்கத் தரப்பு தயா மாஸ்டரை திட்டம் போட்டு பழிவாங்கி விட்டதாகவே இதனைக் கருதலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக அரசதரப்பினால், நிறுத்தப்படவுள்ள வேட்பாளர் என்று முன்னர் ஊடகங்களில் தயா மாஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் கடைசியில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் கூட இடம்பெறவில்லை.
எதற்காக இவரது பெயர் நீக்கப்பட்டது என்பதற்கு அரசதரப்புக் கூறும் நியாயம் அந்தளவுக்குப் பொருத்தமானதாக இல்லை.
சுதந்திரக் கட்சிக்கு வரையறுக்கப்பட்ட ஆசனங்கள் தான் இருந்தன, அவற்றுக்கு மிகப் பொருத்தமான, வெற்றிபெறத் தகுதிவாய்ந்தவர்க ளையே போட்டியில் நிறுத்தியுள்ளதாக, அமைச்சர்கள் நியாயம் கூறுகின்றனர்.
இருந்தாலும், இது உண்மைக் காரணம் என்று கூற முடியாது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகு முன்னரே, அதற்கான முன்னா யத்தங்களை இவரை வைத்தே கோத்தாபய ராஜபக்ச முன்னெடுத்திருந்தார்.
அப்போது தகைமையானவர் என்று தெரிந்ததால் தான், அவரைத் தேடிச் சென்றிருந்தார் கோத்தபாய.
திடீரென அவர் தகைமையற்றவ ராக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன.
முதலாவது  சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னர், 13வது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்ட கருத்து.
இரண்டாவது  13வது திருத்தச்சட்ட விவகாரத்தில், அரச உயர்மட்டத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் சூழலில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்டவர் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
மூன்றாவது  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருக்குதல்.
நான்காவது  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பேச்சாளராக இருந்தவர், அரசதரப்பின் மாகாண சபை வேட்பாளராக போட்டியிடுவதற்குக் கூடத் தகைமையற்றவர் என்று காட்டி அவமானப்படுத்துவது.
ஐந்து  தனக்குப் பின்னால், ஒருதொகுதி முன்னாள் போராளிகளை அணிதிரட்டி அரசின் பின்னால் கொண்டு செல்லத் தவறியது.
ஆறு  அரசதரப்பு முன்னாள் விடுதலைப் புலிகளின் தயவில் ஆட்சியைப் பிடிக்க முனைகிறது என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்கு.
ஏழு  அறிமுகமான வேட்பாளராக இருந்தாலும், வாக்குகளைக் கவரும் திறன் இவருக்கு இல்லை என்றும், முன்னாள் புலியான இவரை அரச வேட்பாளராக ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை என்றும் கொடுக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
இப்படிப் பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன. இதில் சரியான காரணம் என்ன என்பதை, அரச உயர்மட்டம் தான் அறியும்.
வேட்பாளர் தெரிவு முடிந்த பின்னர், இவரும் ஒரு வேட்பாளர் என்று வேட்பாளர் தெரிவுக்குழுவில் இடம்பெற்ற அமைச்சர்களால் கூறப்பட்டதுடன், இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் கூறியிருந்தனர்.
தயா மாஸ்டர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், வேட்பாளர்களைத் தெரிவு செய்தது, வேட்பாளர் தெரிவுக்குழுவே என்று தான் தப்பிக் கொண்டார் ஜனாதிபதி.
எது எவ்வாறாயினும், ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பிட்டது போன்று அரசாங்கம் தயா மாஸ்டரின் முதுகில் குத்திவிட்டதாகவே உணரப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட வைத்து, மீண்டும் தமிழ்த் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்து விட்டு, கடைசியில் இவரது காலை வாரிவிட்டது அரசாங்கம்.
அரசாங்கத்தின் தெரிவை ஏற்காது போயிருந்தால் சிலவேளைகளில் இவருக்கு ஈ.பி.டி.பி.யாவது வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.
ஆனால், இப்போது தயா மாஸ்டரின் நிலை அரசனை நம்பி புருஷனைப் பறிகொடுத்தாக அமைந்து விட்டது.
கபில் 

ad

ad