புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: அரை இறுதிக்கு முன்னேறியது சென்னை அணி
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரிஸ்பேன் ஹீட்டை எதிர்கொண்டது. டாஸ்
ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பவுண்டரியுடன் பேட்டிங்கை தொடங்கிய பிரிஸ்பேன் அணிக்கு, அந்த மகிழ்ச்சியை சென்னை பவுலர்கள் நீடிக்கவிடவில்லை. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ரெய்னா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் பிரிஸ்பேனுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அதே நேரத்தில் அந்த அணி பேட்ஸ்மேன்களும் அடித்து ஆட வேண்டும் என்ற அவசரகதியில் விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தனர். ஒரு கட்டத்தில் 66 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (12.3 ஓவர்) பறிகொடுத்த பிரிஸ்பேன் 100 ரன்களை கடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த இக்கட்டான சூழலில் 7-வது விக்கெட்டுக்கு இணைந்த விக்கெட் கீப்பர் கிறிஸ் ஹர்ட்லியும், பென் கட்டிங்கும் அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றியதுடன், இறுதி 3 ஓவர்களில் 50 ரன்களை சேகரித்தனர். இதில் பென் கட்டிங் 5 சிக்சர்கள் விளாசியதும் அடங்கும். கடைசி பந்தில் ஹர்ட்லி (35 ரன், 3 பவுண்டரி) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் பிரிஸ்பேன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. கட்டிங் 42 ரன்களுடன் (25 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி, மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முந்தைய இரு ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆன விஜய் அதற்கு பரிகாரம் தேடிக்கொள்ளும் வகையில் ஆடினார். அருமையான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்த விஜய் 42 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரெய்னா தனது பங்குக்கு 23 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து நடையை கட்டினார்.

இதன் பின்னர் மைக் ஹஸ்சியும், கேப்டன் டோனியும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். பவுண்டரி, சிக்சர் தொடர்ந்து அடித்து இலக்கை எட்ட வைத்த டோனி, தனது சொந்த ஊர் ரசிகர்களையும் குதூகலத்தில் ஆழ்த்தினார்.

சென்னை அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைக் ஹஸ்சி 57 ரன்களுடனும் (48 பந்து, 7 பவுண்டரி), டோனி 13 ரன்களுடனும் (5 பந்து) களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது. 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட பிரிஸ்பேன் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ad

ad