புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

த.தே.கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியின் தாக்கம்: கிளிநொச்சியில் பொதுமக்கள் மீது இராணுவக் கெடுபிடி
தேர்தல் காலத்தில் இராணுவத்தின் அடாவடித்தனங்களின் மத்தியில் வெற்றியீட்டிய மக்கள் மீது தேர்தல் முடிந்தும் இராணுவக் கெடுபிடி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளத்தின் கீளுள்ள விவசாயக் கிராமமான கண்ணகைபுரக் கிராம மக்கள் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமது நியாயமான ஜன நாயகத் தீர்ப்பின் மூலம் வீட்டுச் சின்னத்திற்குத் தமது ஏகோபித்த வாக்குகளை வழங்கித் தமிழர்களது வெற்றியினை உறுதிப்படுத்தினர்.
இதனைச் சகிக்க முடியாத அரச தரப்பினர்களாகச் செயற்படும் குறிப்பாக ஈபிடீபியினரும் இராணுவத்தினரும் அடாவடிகளை நடத்தி வருகின்றனர்.
சிறிய கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் குவித்து மக்களை உள ரீதியாக அச்சப்படுத்தி வருகின்றனர்.
இம்மக்கள் அன்றாடம் தாம் குளிப்பதற்கும் குடி நீர் எடுப்பதற்கும் ஆற்றங்கரைகளுக்குச் செல்வதற்கு அச்சப்படுவதோடு, உறவினர் வீடுகளுக்குக் கூட இயல்பாக நடமாடமுடியாதவாறு முடக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அப்பகுதி கிராம சேவையாளரும் ஈபிடீபி ஆதரவாளருமான பசுபதி சபாரட்ணம், அப்பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட கிருஸ்ணபிள்ளை தயாகரன் ஆகியோரும் மக்களை இனங்காட்டுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு அப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு கிராம அலுவலர் என்ற வகையிலும் வீட்டுத் திட்டக் குழுத் தலைவர் என்ற வகையிலும் தமது அதிகாரத்தினைப் பயன்படுத்தி மக்களது சுமூகமான செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.
கடந்த 26.09.2013 அன்று அப்பகுதிப் பொதுமகனான கனகசுந்தரம் சுவிதரன் (வயது 31) காரணமின்றி பொலிசாரால் கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டு மறு நாளே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதை விட கந்தையா கேதீஸ்வரன் ( வயது 46), வன்னியசிங்கம் இராமச்சந்திரன் ( வயது 31) ஆகியோர் ஈபிடீபி ஆதரவாளர்களிடம் வாக்குவாதப்பட்டதாகக் கூறி இராணுவத்தினரும் பொலிசாரும் அவர்களது வீடுகளிற்குச் சென்று தேடி வருகின்றனர். இதனால் குறித்த நபர்கள் ஊரை விட்டுச் சென்றுள்ள நிலையில் இன்னமும் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

ad

ad