புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

கண்டியை குழப்பும் சேவலை ஏன் நுவரெலியாவில் காணவில்லை ? ஆறுமுகன் பதில் கூற வேண்டும் : மனோ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டியில் சேவல் சின்னத்திலும், நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
நுவரெலியாவை விட குறைந்த தொகை தமிழர் வாழும் கண்டி மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் ஆறுமுகன் தொண்டமானின் கட்சி, நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மலையக தமிழர் வாழும் நுவரெலிய மாவட்டத்தில் ஏன் சேவல் சின்னத்தில் போட்டியிடவில்லை என்ற கேள்வியை புத்தியுள்ள கண்டி மாவட்ட தமிழர்கள் கேட்கின்றார்கள்.

அதேபோல் நுவரெலியாவில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் இந்த கட்சி, கண்டி மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாததன் உண்மை காரணம் என்ன என்றும் புத்தியுள்ள கண்டி தமிழர்கள் கேட்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கண்டி திகண நகரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் கீழ் சுமார் 20,000 தமிழ் வாக்குகள் கொண்ட மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிடுவதில் நியாயம் இருக்கின்றது. வாக்குகள் எண்ணப்பட்டு கடைசியில் மிஞ்சும் வாக்குகளில் "மிகுதி வாக்கு" என்ற அடிப்படையில் ஒரு ஆசனம் கிடைக்கும். இதை இவர்களுக்கு புரியும்படி கற்றுகொடுத்ததே நான்தான்.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் மலையக மக்கள் முன்னணியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இவர்களுடன் சேர்ந்து நாம் போட்டியிட்டோம். இதன்மூலம், அந்த "மிகுதி வாக்கு" என்ற அடிப்படையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தமிழ் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதை நான் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று என்னிடம் இருக்கும் தமிழ் உணர்வு காரணமாக செய்தேன். நாங்களும் குறுகிய கட்சி அரசியல் நோக்கில் எங்களின் ஏணி சின்னத்திலோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திலோ களத்தில் இறங்கியிருந்தால், தமிழ் வாக்குகளை சிதறடித்திருப்போம். அப்படி செய்திருந்தால், ஒரு தமிழ் உறுப்பினரும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். இப்படி கூட்டாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை ஜனாதிபதியிடம் அழைத்து சென்று தங்கள் சொந்த முயற்சியினால் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஆறுமுகன் தொண்டமான் போலி பெருமை பேசி மார்தட்டியிருக்கவும் முடியாது.

இன உணர்வுடன் இத்தகைய நல்ல காரியம் செய்த எனக்கு இவர்கள் காட்டும் பிரதியுபகாரம் கண்டியில் தமிழ் வாக்குகளை சிதறடித்து, யானை சின்னத்தில் போட்டியிடும், எங்கள் வேட்பாளர் வேலு குமாரின் வெற்றியையும், ஐ.தே.க. வேட்பாளர் ராஜரத்தினத்தின் வெற்றியையும் குழப்ப முயலுவதாகும்.

மாத்தளையில் தனித்து போட்டியிடுங்கள். அது சுமார் 2,000 தமிழ் வாக்குகளை கொண்ட மாவட்டம். அங்கே சிலவேளை மிகுதி வாக்கில் ஒரு ஆசனம் கிடைக்கலாம். ஆனால் கண்டி என்பது 90,000 தமிழ் வாக்குகளை கொண்ட மாவட்டம். கண்டியிலே பாரம்பரியமாக சுமார் 40,000 தமிழ் வாக்காளர்களே வாக்களிப்பில் கலந்து கொள்கிறார்கள். இங்கு ஒரு வித அச்சம் நிலவுகின்றது. அதை நாம் நமது பிரசாரத்தின் மூலம் உறுதியுடன் படிப்படியாக மாற்றி வருகின்றோம். இதையே இன்று இ.தொ.கா.வின் சேவல் நுழைந்து குழப்புகிறது.

இது மட்டும் அல்ல. கண்டி மாவட்ட மக்களிடம் இவர்கள் உண்மைக்கு மாறான பிரசாரம் செய்கிறார்கள். கண்டியில் இல்லாத தமிழ் பிரதிநிதித்துவத்தை இவர்கள் பெற்றுக் கொடுக்க போகிறார்களாம். ராஜரத்தினம், கண்டி மாவட்ட மாகாணசபை உறுப்பினராக கடைசிவரை இருந்தது இவர்களுக்கு தெரியவில்லையா? ராஜரத்தினம் என்ன தமிழர் இல்லையா? அவர் என்ன சிங்களவரா? இந்த உண்மை இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? அறிவுக்கு எட்ட வில்லையா? எத்தகைய ஒரு அறிவுகெட்ட அரசியலை இவர்கள் செய்கின்றார்கள்.

இன்று ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கண்டியில் இருக்கின்றது. குறைந்தபட்சம் வாக்களிக்கும் 40,000 தமிழ் வாக்காளர்களும் தமது விருப்பு வாக்குகளை வேலு குமாருக்கும், ராஜரத்தினத்துக்கும் கவனமாக வழங்கினால் இருவரும் வெற்றி பெறுவார்கள். இருக்கின்ற இந்த ஒன்றைத்தான் நான் இரண்டாக அதிகரிக்க போராடுகின்றேன். இன்று இருக்கின்ற இந்த ஒன்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்கு, ஆறுமுகன் முயற்சி செய்கின்றார். இதுதான் எனக்கும், ஆறுமுகனுக்கும் இடையில் இருக்கும் முதல் வித்தியாசம்.

இதுபற்றி நான் ஆச்சரியபடவில்லை. இவர்கள் இதை வெற்றிலை சின்னத்துக்கு சொந்தகாரர்களான அரசாங்கத்தை சந்தோசப்படுத்த செய்கிறார்கள். தமிழ் வாக்குகளை சிதறடித்து தமிழ் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்து தமிழர்களை அரசியல் அனாதைகள் ஆக்குவதுதான், மகிந்த அரசாங்கத்தின் திட்டம். மகிந்தவின் கூலிக்கு ஆறுமுகன் மாரடிக்கின்றார். நான் என்றும் மதிக்கும் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் இன்று உயிருடன் இருந்திருந்தால் ஒருபோதும் இத்தகைய கூலிக்கு மாரடித்து கண்டி தமிழன் தலையில் கொதிநீரை கொட்டும் பாவச்செயலை செய்ய உடன்பட்டிருக்க மாட்டார்.

இது ஆறுமுகன் தொண்டமானுக்கு கைவந்த கலை. இன்று கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் பற்றி ஆறுமுகன் பேசுகிறார். இவர் கட்சியில் இன்று இதே கண்டியில் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மதியூகராஜாவுக்கு கிடைக்க இருந்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமல் செய்தது இவர்தான். தனது அன்றைய நண்பர் பைசர் முஸ்தபாவுக்கு வாக்கு வாங்கி கொடுத்து மதியூகராஜாவை தேர்தலில் தோற்கடித்தது இவர்தான். இன்று அதே மதியூகராஜா சேவல் சின்னத்தில் ஆறுமுகன் கட்சியில் போட்டியிடுகின்றார். அவருக்கும் வெட்கமில்லை, இவருக்கும் வெட்கமில்லை. ஆனால் எனக்கும், எனது கண்டி மாவட்ட தமிழ் உடன்பிறப்புகளுக்கும் வெட்கம், மானம், சூடு, சுரணை இருக்கின்றது.

ad

ad