14 அக்., 2013

சனல் 4 ஊடகவியலாளரா; தேடுதல் வேட்டை 
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், இலங்கைக்கு வந்துள்ளதாகத் கிடைத்த தகவலையடுத்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.


கொழும்பிலுள்ள ஒரு அடுக்குமாடியில், பிரித்தானியாவின் சனல் 4 ஊடகவியலாளரும், அவரது மனைவியும் தங்கியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில்,அவர்கள் அடிக்கடி இலங்கைக்கு வந்து செல்வதும், அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காகவே வந்திருந்ததும் தெரியவந்தது.

எனினும், அவர்கள் இலங்கையின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் தகவல்களைத் திரட்டுவதற்காக வந்தனரா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடியின் முகாமையாளரிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தி வரும் சனல் 4 தொலைக்காட்சி, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் புதிய சர்ச்சைகளை கிளப்பிவிடுமோ என்று இலங்கை அரசாங்கம் அச்சத்தில் உறைந்துள்ளது.

இதேவெளை, பொதுநலவாய மாநாட்டிற்கு சனல் 4 ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=730262360114344203#sthash.dpH4GHjK.dpuf