14 அக்., 2013

முல்லைத்தீவில் புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை த.தே.கூட்டமைப்பினர் சந்திப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பைலின் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களையும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தீர்த்தக்கரை, கள்ளப்பாடு, சிலாவத்தை, தியோகுநகர், செல்வபுரம், உள்ளிட்ட கரையோரக் கிராமங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல லட்சக்கணக்கான கடற்றொழில் உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை மீன்பிடி அமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைளை அவதானித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட விபரங்களையும் சேகரித்திருக்கின்றனர்.
இவற்றினடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
போரினால் ஏற்பட்ட இழப்புக்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தற்போது மீள் எழுச்சி பெற்றுவரும் நிலையில் இந்த இழப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.