பாராளுமன்ற உணவகத்தில் வைத்து சம்பந்தன் மிரட்டியதாக அஸ்வர் எம்பி.குற்றச்சாட்டு
பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தன்னை மிரட்டும் தொனியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடந்து கொண்டதாக அரச தரப்பு தேசியப் பட்டியல் எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் சபாநாயகரிடம் முறையிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ச ஊடகங்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அதில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் எம்.பிக்களின் உரைகளை பிரசுரிக்க முடியாது விட்டாலும் இந்த விவாதங்களில் எந்தெந்த உறுப்பினர்கள் உரையாற்றினார்கள் என்று பெயர்களையாவது பிரசுரியுங்கள்.
அதன்போது எழுந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அஸ்வர் எம்.பி. சில தமிழ், ஆங்கில ஊடகங்களின் பெயர்களை குறிப்பிட்டு தனக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியிட்டுள்ளதனையும் தான் சம்பந்தன் எம்.பியின் உரையை குழப்பும் விதத்தில் செயற்படவில்லையென்றும் சில கேள்விகளையே கேட்டதாகவும் கூறினார்.
அத்துடன் தனது கேள்விகளால் சம்பந்தன் எம்.பிக்கு உரையாற்றுவதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் தான் மனம் வருந்துவதாகவும் ஆனால் (நேற்று) வியாழக்கிழமை பாராளுமன்ற உணவகத்தில் வைத்து சம்பந்தன் எம்.பி. தன்னை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டதாகவும் கூறினார்.
ஆனால் இது தொடர்பில் சபாநாயகர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.