புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2013

வடக்கு இராணுவ ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் முறுகல் வெடித்தது! ஆளுநரின் சர்வாதிகாரம் என குற்றச்சாட்ட
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணங்கிச் செயற்படாமல் மாகாண சபை விடயங்களில் இராணுவ ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருவதால் அவருக்கும் மாகாண சபைக்கும் இடையேயான முறுகல் நிலை நேற்று வெளிப்படையாக வெடித்தது.
வடக்கு மாகாண முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ தெரியப்படுத்தாமல் மாகாண சபையின் ஆளணி மீளாய்வுக் கூட்டத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் தனது தலைமையில் கூட்டினார் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி.
அதுமட்டுமல்லாமல் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான டெனீஸ்வரனின் செயலாளரை அமைச்சருக்குத் தெரியாமலே இடம்மாற்றம் செய்துள்ளார்.
ஆளுநரின் இந்தச் செயற்பாடுகளின் மூலம் அவர் மாகாண சபை நிர்வாகத்தை குழப்பியடிக்க தயாராகிவிட்டார் என்பதை வெளிப்படுத்துவதாகவும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை ஓரங்கட்டிச் செயற்பட அவர் தயாராகி வருவதாகவும் வடக்கு மாகாண அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் ஆளணி மீளாய்வுக் கூட்டம் நேற்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சரோ, அமைச்சர்களோ அழைக்கப்படவில்லை.
மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மாகாண சபையின் ஆளணியை மீளாய்வு செய்யும் முக்கிய பொறுப்பு முதலமைச்சருக்கே உள்ள போதும் அவரை அழைக்காமல் ஆளுநர் இந்தக் கூட்டத்தை தன்னிச்சையாக நடத்தினார்.
இதன் மூலம் ஆளுநருக்கும் மாகாண சபைக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் நேற்று வெளிப்படையாக வெடித்தது. அத்துடன் வடக்கு மாகாண சபையின் அமைச்சருக்குத் தெரியாமலேயே அந்த அமைச்சின் செயலாளர் வடக்கு மாகாண ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் டெனீஸ்வரனின் செயலாளராக முன்னர் ராஜேந்திரா நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அமைச்சரின் செயலாளராக திருவாகரனை நியமித்தார்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆளுநரினால் திருவாகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அமைச்சர் டெனீஸ்வரனின் செயலாளராக, முதலமைச்சரின் செயலாளராகக் கடமையாற்றிய ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை முதலமைச்சரின் செயலாளராக திருவாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சின் செயலாளர் மாற்றம் தொடர்பில் தன்னுடன் ஆளுநர் கலந்துரையாடவில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுத்தே அவர் இந்த இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் டெனிஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுநரின் இந்த தன்னிச்சையான செயற்பாடுகள் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை குழுப்பியடிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் அவர் தனது சர்வாதிகார ஆட்சிக்குள் மாகாண சபையை வைத்திருக்க முயற்சிப்பதாகவும் மாகாண அமைச்சர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

ad

ad