2 டிச., 2013

260 கிலோ கிராம் ஹெரோயின் பிடிப்பட்ட சம்பவத்துடன் பிரதமர் சம்பந்தப்படுவது தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி
இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருள் சம்பவத்துடன், நாட்டின் இரண்டாவது குடிமகனான பிரதமரின் பெயர் சம்பந்தப்படுத்தப்படுவது தொடர்பில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
260 கிலோ கிராம் ஹெரோயின் தொகை தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமரின் பெயர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்படுவது நாட்டுக்கு பாதிப்பான நிலைமையாகும்.
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கை சுங்க திணைக்களத்தின் ஒருகொடவத்தை பரிசோதனை பிரிவில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றில் இருந்து தெற்காசியாவிலேயே பெருந் தொகை எனக் கூறப்படும் ஹெரோயின் போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது.
சுங்க அதிகாரிகளும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து 260 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றினர். இது இலங்கை ரூபாவின் மதிப்பில் 260 கோடி ரூபா என ஊடகங்ள் தெரிவித்திருந்தன.
இந்த கொள்கலன் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்ததுடன் இலக்கம் ரி.30 ரயில் குடியிருப்பு, மாளிகாவத்தை என்ற முகவரியில் உள்ள ரொஹான் இன்பெக்ஸ் என்ற நிறுவனம் இறக்குமதி செய்திருந்தது.
எனினும் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த நிறுவனம் கொள்கலன் பெட்டி இலங்கைக்கு வந்த ஜூன் 22 ஆம் திகதிக்கு பின்னரே நிறுவனம் மற்றும் நிறுவனப் பதிவு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெரோயின் கொள்கலன் தடையின்றி இலங்கைக்கு வரும் வரை விற்பனையாளர்கள் பின்னால் மறைந்திருந்துள்ளனர். விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் உரிமையை உறுதிப்படுத்த முன்வந்தனர் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவரும் பாகிஸ்தான் பிரஜையும் கைது செய்யப்படடுள்ளனர். எனினும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. இது சம்பந்தமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெறுமதியான பாரியளவிலான ஹெரோயின் தொகையை இறக்குமதி செய்தது சாதாரண விற்பனையாளர்களாக இருக்கமுடியாது.
பல போதைப் பொருள் வியாபாரத்திற்கும் அதனை விற்பனை செய்பவர்களுக்கு பலமான அரசியல் பாதுகாப்பு இருக்கக் கூடும் என பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் காணப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் கொள்கலனுக்கு தாமத கட்டணத்தையும் துறைமுக கட்டணத்தையும் வழங்குமாறு கோரி பிரதமர் அலுவலகத்தின் இலச்சினையுடன் அங்கு பணியாற்றும் ஒருவர் ஓக்ஸ்ட் 23 ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தாக நவம்பர் 10 ஆம் திகதி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
வெளியாகிய இந்த செய்தி மிக முக்கியமான செய்தியாகும்.
பிரதமர் சார்பில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். குறித்த நிறுவனத்தின் முதலாவது வர்த்தக நடவடிக்கை இது என்பதால் மேலதிக பணத்தை செலுத்த முடியாது எனவும் தாமத கட்டணம் மற்றும் துறைமுக கட்டணங்களில் இருந்து விலக்களிக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.
நாட்டின் இரண்டாவது குடிமகனான பிரதமரை இந்த சம்பவத்துடன் சம்பந்தப்படுத்தியிருப்பது நடைபெறறும் விசாரணைகளுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் பாதிப்பான நிலைமை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் டி.எம். ஜயரத்ன சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.