2 டிச., 2013இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ் சென்று முதலமைச்சரை சந்திக்கவுள்ளார் 
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் எனவும் அவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் இந்திய மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழர்களின் உரிமைகளும் இந்தியாவின் நிலையும் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமருக்கு விடுத்துள்ள அழைப்பு இன்னும் அப்படியே உள்ளது. முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் அங்கு செல்வார். 

இலங்கை தமிழர்கள் பிரச்சினையை மற்றவர்கள் போல் நமக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி பொதுமேடை அமைத்துக்கொள்வது கிடையாது. 

அதனால், நமது கருத்து வெளியே தெரிவதில்லை. அதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கூட்ட அமைப்பாளரும் நான்தான் அழைப்பாளரும் நான்தான் பேச்சாளரும் நான்தான். 

யாருக்கு எதிராகவோ பேச இந்த கூட்டம் அமைக்கப்படவில்லை. இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக முதலாவதாக ஒப்பந்தம் உடன்படிக்கை செய்தவர் ராஜிவ் காந்தி. அந்த உடன்பாட்டை முறிக்க யார் காரணம். 

அதன் விளைவு உள்நாட்டிலேயே போர் ஏற்பட்டது. பலர் இறந்தனர். அந்த வரலாறு மனவருத்தம் தரும் வரலாறு. அந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், அங்கு தமிழரின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும். உறவு பலப்பட்டிருக்கும். அந்த 15 ஆண்டு கால சோகம் நடந்திருக்காது. 

இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு நடந்த உள்நாட்டு போரை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

ஆனால், அது வெற்றி பெறவில்லை. அந்த போரில் அப்பாவி மக்கள், ராணுவத்தினர், விடுதலைப்புலிகள் என 65 ஆயிரம் பேர் இறந்தனர். 

இந்த பிரச்சினையை மூன்றாக வகைப்படுத்தலாம். ஒன்று இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்க செய்வது ஆகும். 

அடுத்து, அங்கு நடந்த இனப்படுகொலை குறித்து ஆழமான, நேர்மையான விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். மூன்றாவதாக, அங்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு, வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான். 

இந்திய அரசு இதில் என்ன செய்ய இருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். தமிழர்கள் இந்த விஷயத்தில் பொறுமையாக அணுக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதை சிந்தனையாளர்களின் மன்றமாக கருதுகிறேன். இந்த உலகத்தில் இலங்கையைப்போல் 190 நாடுகள் உள்ளன. இலங்கை இறையாண்மை பெற்ற நாடு. ஒரு அரசு, நாடாளுமன்றம் உள்ளது. தேர்தல்களும் நடக்கிறது. 

தமிழர்கள் அங்கு மொழி சிறுபான்மை மக்களாக வாழ்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை அவர்களால்தான் புரிந்துகொள்ள முடியும். 
இந்தியாவிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள். ஒரு இறையாண்மை உள்ள நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவது எளிதல்ல. 

இந்தியாவிலும் பலர் தனிநாடு கேட்கிறார்கள். அப்படி தனிநாடு கோரிக்கையை நாம் சரி என்றா கேட்கிறோம். இந்த விஷயத்தை உணர்ச்சி பூர்வமாக எடுக்க முடியாது. அறிவுப்பூர்வமாக எடுக்க வேண்டும். 

அதற்காகத்தான், இந்தியா - இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சிங்களம் போல் தமிழையும் அரசு மொழியாக்க வேண்டும். வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைத்து புதிய மாகாணத்தை உருவாக்க வேண்டும். ஆனால், இந்த வாக்குறுதிகளை இலங்கை மீறிவிட்டது. 

இலங்கையில் உள்ள உச்சநீதிமன்றம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கு - கிழக்கு மாகாணம் இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. 

தற்போது, 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை மீண்டும் சீர்குலைக்க முயற்சி நடந்து வருகிறது. ஒரு இறையாண்மை நாட்டிற்கும், அண்டை நாட்டுக்கும் இடையே விவாத பொருளாக 13-வது அரசியல் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. 

முரட்டுத்தனமாக இந்த பிரச்சினையை எதிர்கொண்டால் எப்படி தீர்வு கிடைக்கும்.தொடர்ந்து, சாதுர்யமாக, ராஜதந்திரமாக 13-வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும். 13-வது அரசியல் சட்டத்திருத்தம் உறுதியாக நிறைவேற்றப்படும். 

இந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், தி.மு.க. - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது, அதில் 2 திருத்தங்களை செய்ய வேண்டும் என்றார். நாங்கள் டெல்லி செல்வதற்குள் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். 

இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர, தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அதை பாரதிய ஜனதாவிடம் எடுத்து சென்றபோது அக்கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆதரிக்கவில்லை. 

சரி, தீர்மானமாவது வேண்டுமா?, வேண்டாமா? என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டலாம் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கும் பாரதிய ஜனதா ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. 

நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவராததற்கு பாரதிய ஜனதா தான் காரணம். அவர்கள் எப்படி தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்து, இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்வார்கள்?. 

இலங்கையில் நடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளாதது சரியான முடிவு. அவர் அங்கு செல்லக்கூடாது என்று நானே வலியுறுத்தியுள்ளேன். 

ஆனால், அந்த மாநாட்டை புறக்கணிக்க கூடாது என்பது நமது நிலை அல்ல. மாநாட்டை புறக்கணித்தால் பிற பிரச்சினைகள் பற்றி நம்மால் பேச முடியாது. 

அந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டது, இந்தியா எடுத்த விவேகமான முடிவாகும். அங்குள்ள தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு. 

ஒரு கட்டத்தில் ராஜபக்ஷவே தனது நிலைப்பாடுகளை மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை ஓயமாட்டோம். 

இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்படும்போது அங்குள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கும் என்றார்.