புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2013

இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது; வைகோ 
சிறிலங்காவில்  இடம்பெற்றது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே, இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


இரவுக்குப் பின் வைகறை மலர்வது போல், துன்ப இருளில் தவித்த சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது.

சிறிலங்காவில் நிகழ்ந்தது ‘இனப்படுகொலையே' என ஜெர்மனின் பெரிமனில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துவிட்டது. அதன்படி இந்த மக்கள் தீர்ப்பாயம், இலங்கைத் தமிழர் இனப்படுகொலை உண்மையை உலகத்துக்கு தெரிவித்துவிட்டது.

இதுவரை, போர்க்குற்றம் என்று சொல்லப்பட்ட வார்த்தைப் பிரயோகம்,  சிறிலங்காவின் கொடிய குற்றத்தை சற்று நீர்த்துப்போக வைக்கின்ற முயற்சி என்றே கருதி, தொடக்கத்திலிருந்தே நடந்தது இனப்படுகொலை என்பதனை நாம் அழுத்தமாக வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

இந்த விசாரணையின்போது விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டபோது, இது மேல்நாட்டு அரசாங்கங்களால் தங்களுடைய அரசியல் பூகோள நலன்களுக்காக உரிமைக்குப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டாகும் என்று மியான்மர் தேசத்தின் ஜனநாயகப் போராளி மவுங் ஜார்னி தெரிவித்தார்.

அப்படிப் பார்த்தால், நெல்சன் மண்டேலாவும் ஒரு காலத்தில் பயங்கரவாதிதான். ஆனால், அவர் விடுதலைப் போராளி என்று உலகம் போற்றுகிறது. அவர் விடுதலைப் போராளி என்றால், விடுதலைப்புலிகள் இயக்கமும் விடுதலைப் போராளி இயக்கம் தான் என்பதனை தீர்ப்பாயம் அந்த விவாதத்தில் தெரிவித்திருக்கிறது.

இந்த தீர்ப்பாய விசாரணையில், உலகம் எல்லாம் உள்ள தமிழர்களின் ரணமாகிப் போன இதயங்களுக்கு மருந்து போடுவது போல, “ஈழத் தமிழர்கள்” என்றே  சிறிலங்காவில் வாழும் தமிழர்களை குறிப்பிட்டது ஆறுதலையும் ஈழ விடியல் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜெர்மன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாள், ஐ.நா. சபை கடைபிடிக்கின்ற உலக மனித உரிமை நாளான டிசம்பர் 10 என்பது சத்தியத்தின் வெற்றியாகும்'' என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad