புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2014


இலங்கை அணியின் பயிற்சியாளர் போல் பாப்ரஸ் இங்கிலாந்து உதவி பயிற்சியாளராக செல்ல திட்டம்

இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி, ஏமாற்றம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பாப்ரஸை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக வெளியான உறுதியற்ற செய்திக்கு இலங்கை கிரிக்கெட் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
பாப்ரஸ் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை அதிக கவனம் செலுத்துவது உறுதியான நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் பாப்ரஸின் ஒப்பந்த காலம் எதிர்வரும் 2015 டிசம்பர் 31 ஆம் திகதியே முடிவடையவுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் அவர் ஒப்பந்தக்காலம் முடியும்வரை இருக்க மாட்டார் என நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும் இங்கிலாந்து அணிக்கான உதவிப் பயிற்சியாளரை தேர்வுசெய்ய சபை இன்னும் ஒரு சில தினங்களை எடுத் துக்கொள்ளும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் நிர்வாக இயக்குனர் போல் டோன்டன் குறிப்பிட்டுள்ளார். "நாம் உதவி பயிற்சியாளரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அவரது தற்போதை பணி வழங்குனர்களுக்கு மதிப்பு வழங்க வேண்டியுள்ளது. எனவே நாம் இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட மாட்டோம். விரைவில் வெளியிட எதிர்பார்த்திருக்கிறோம்" என்றார்.
எனினும் பாப்ரஸ் குறித்த செய்தி கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து ஊடகங்களில் வெளியாகும்வரை அது குறித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிந்திருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பாப்ரசை தொடர்புகொள்ள இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பல முறை முயற்சித்தபோதும் அது முடியாமல் போயுள்ளது.
இலங்கை அணி ஒரு சில வாரங்களுக்குள் இங்கிலாந்து செல்லவுள்ள நிலையில் இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு இருபது-20 போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்லவுள்ளது.
"இலங்கை கிரிக்கெட் சபை தற்போதைய நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் இது குறித்து தொடர்புகொண்டுள்ளது. ஆனால் இது குறித்து பாப்ரஸ{டன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டே கருத்து வெளியிட முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது. அத்துடன் தாம் தனி நபர் ஒருவருடனேயே ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை விளக்கியுள்ளது" என்று இலங்கை கிரிக்கெட் சபையின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாப்ரஸின் ஒப்பந்தக்காலம் கடந்த ஜனவரி முதலாம் திகதியுடன் ஆரம்பித்தபோதும், கடந்த ஜனவரி 24 ஆம் திகதி இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போதே அவர் அதனை பொறுப்பேற் றார். இந்நிலையில் பாப்ரஸ் தனது பதவியில் இருந்து விலகுவதாக இருந்தால் அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னரே சபைக்கு அறிவிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் செயலாளர் நி'hந்த ரணதுங்க குறிப்பிட்டார்.
அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால் அவரது முன்கூட்டிய வெளியேற்றத்திற்காக இழப்பீடு தரவேண்டிய நிலை ஏற்படும். அவரது பதவிக்காலத்தில் ஆறு மாத தகுதிகாண் காலம் இருக்கும் சூழலிலும் இந்த நிலை ஏற்படும் என்று ரணதுங்க குறிப்பட்டார்.
பாப்ரஸ் இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று இரண்டரை மாதமேயாகும் நிலையில் அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கிண்ணம் மற்றும் இருபது-20 உலகக் கிண்ணங்களை வென்றுள்ளதோடு விளையாடப்பட்ட 18 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. இருபது-20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு உள்நாட்டில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுகளில் பாப்ரஸ் பங்கேற்கவில்லை. இலங்கை அணி நாடு திரும்பியதும் அவர் தனது தாய்நாட்டுக்கு சென்றுவிட்டார்.
இலங்கை அணிக்கு அடுத்த மே மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு சர்வதேச போட்டிகள் உள்ள நிலையில் பாப்ரஸ் இங்கிலாந்து பதவியை ஏற்றால் இலங்கை கிரிக்கெட் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். இலங்கை அணியின் எதிர்வரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து அது ஜ_லையில் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியான தென்னாபிரிக்காவுடன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
தொடர்ந்த பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஓகஸ்டில் முழுமையான கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட இலங்கை வருவதற்கு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று இலங்கை அணி 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான நம்பிக்கையுடன் அதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா, நியு+ஸிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கு சுமார் ஓர் ஆண்டாவது அணியுடன் செயற்பட்ட அனுபவம் கொண்ட தலைமை பயிற்சியாளருடன் பங்கேற்க இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.
கடந்த ஜனவரியில் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்த கிரஹாம் போர்ட் விலகிக்கொண்டதையடுத்து பாப்ரஸை பயிற்சியாளராக நியமிப்பதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரை தேடுவதில் பொருளாதார ரீதியில் பல சிக்கல்களையும் எதிர்நோக்கியது. கடன் பிரச்சினையை எதிர்நோக்கிவரும் இலங்கை கிரிக்கெட் ஒரு பிரபலமான பயிற்சியாளரை கவர்வதற்கு தவறியது.
இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பாப்ரஸ் ஒரு சில வாரங்களில் இளம் வீரர்களின்; திறமை காரணமாக தாம் உற்சாகம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டார். அணியில் தொடர்ந்து நிலைத்திருப்பது குறித்து விருப்பம் வெளியிட்டிருந்தார்.

ad

ad