புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014


வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க இணையதளத்தில் வசதி: தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டிவாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்க வசதியாக இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

பயிற்சி முகாம்
தமிழகத்தில் வருகிற 16–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடந்தது.
பயிற்சி முகாமிற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை தாங்கினார். அதன்பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பிரவீன்குமார் கூறியதாவது:–
16 ஆயிரம் பேர்
தமிழகத்தில் வருகிற 16–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி 4 கட்டமாக நடக்கிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல், நாளை (அதாவது இன்று, செவ்வாய்க்கிழமை) கோயம்புத்தூரிலும், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை திருச்சியிலும், மாலை மதுரையிலும் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற்று பயிற்சி பெறும் அதிகாரிகள் தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 16 ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கின்றனர்.
செல்போன் கொண்டு செல்ல தடை
இந்த பயிற்சி முகாமில் அதிகாரிகளுக்கு, வாக்கு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது?. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எப்படி திறப்பது?. ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை திரும்ப எண்ண சொன்னால் அதை எப்படி செய்வது?. தேர்தல் முடிவை எவ்வாறு அறிவிப்பது?. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது எப்படி?. என்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை வருகிற 16–ந்தேதி நடக்கிறது. சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு மையங்களிலும் தலா 120 பேர் என 3 மையங்களில் 360 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்று தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் அவர்கள் தங்கள் செல்போன்களை வைத்து உபயோகப்படுத்தலாம். அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இணையதளத்தில் வசதி
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறாது. ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் வேட்பாளர்கள் பங்குபெறும் கூட்டம் மட்டும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் ‘வெப் கேமரா’ மற்றும் சாதாரண ‘கேமரா’ மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ‘இ–மெயில்’ மூலம் தலைமை தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
வாக்குப்பதிவை எப்படி இணையதளத்தில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டதோ?. அதே போல், வாக்கு எண்ணிக்கையும் பொதுமக்கள் இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளையும் இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

ad

ad