இந்த மாதிரி தப்பைச் செய்துவிட்டு இயக்குநரிடம் சொன்னால் பெரும்பாலும் அறை விழும். சொல்லாமல் இருக்கவும் முடியாது. பதைபதைப்போடு அந்த இயக்குநரிடம் சொன்னால், அவர் ரொம்பவே கூலாக ‘டப்பிங்ல பாத்துக்கலாம் விடு’ என்று சொல்லிவிட்டார். உதவி இயக்குநருக்கோ தாங்க முடியாத ஆச்சரியம். விஷுவலில் ஏற்பட்ட தப்பை எப்படி டப்பிங்கில் சரி செய்ய முடியும்?
ஆர்வதோடு டப்பிங் நாளுக்காக காத்திருந்தார். டப்பிங்கில் அந்த சீன் வந்தபோது, பாம்பு படம் எடுத்து ஆடும் சீனை எடிட்டிங்கில் சேர்த்திருந்த இயக்குநர் இப்படி ஒரு டயலாக்கைப் பாம்பின் மைண்ட் வாய்ஸில் பேச வைத்துச் சேர்த்தார். ‘‘நானே அடிக்கடி சட்டையை மாத்துறவ.. நீ சட்டையை மாத்திட்டு வந்தா எனக்கு கண்டுபிடிக்கத் தெரியாதா?’’
இப்படி சினிமாவை ஜஸ்ட் லைக் டீல் செய்தவர்தான் இயக்குநர் ராமநாராயணன். பாடல் ஆசிரியராக சினிமாவிற்குள் நுழைந்து, வசனகர்த்தாவாக உயர்ந்து, பின் இயக்குநர் ஆனவர். நாயகர்களின் பின்னால் அலைந்து கொண்டிருந்த இயக்குநர்களையும், ரசிகர்களையும் பாம்பு, ஆடு, குரங்கு, யானையை வைத்து தன் பக்கம் இழுத்தவர்.
‘ஆடிவெள்ளி’, ‘துர்கா’ என பக்தி படங்களில் விலங்குகளை வைத்து சாகசத்தையும் காமெடியையும் தந்து
பத்தாவது படத்துக்கே இயக்குநர் பப்படம் ஆகும் இன்றைய கால கட்டத்தில் ஒன்பது மொழிகளில் 125 படங்களை இயக்கியது அவ்வளவு எளிதில் யாரும் முறியடிக்க முடியாத சாதனை. தனது 65&வது வயதிலும் சிறுநீரகப் பிரச்னை இருக்கும்போது ‘நீ சரக்கு - நான் ஊறுகா’ என்று படம் எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டிருந்தார்.
ராமநாராயணனுக்கு எப்போதும் சின்ன பட்ஜெட் படங்களின் மீது ஆர்வமும் கனிவும் அதிகம். ‘பெரிய பட்ஜெட் படம் எப்படியும் ஓடிரும். சினிமா எடுக்கணும்னு ஆசையில சிலர் வந்து, இருக்குற சொத்தை வித்து, படம் எடுத்து அதை யாருமே கவனிக்காம கடனாளியாகி நொந்து நொடிச்சிடுறாங்க’’ என்று சதா சிறு தயாரிப்பாளர்களைப் பார்த்து பரிதாபப்படுவார்.
‘நன்றாக இருக்கிறது’ என்று தன் காதுக்கு வரும் படங்களை வாங்கிக் கொள்ளச் சொல்லி பெரிய தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்வார். எந்தப் பட ஆடியோ ரிலீஸாக இருந்தாலும், அதில் கலந்துகொண்டு, ‘‘இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போதே படத்தின் வெற்றி என் கண்களுக்குத் தெரிகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’’ என்று சொல்வார். அது அவரது டெம்ப்ளேட்டான வசனம் என்பது அத்தனை சினிமாக்காரர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவரது வாழ்த்தை அவ்வளவு மரியாதையாக ஏற்றுக்கொள்வார்கள்.
‘தயாரிப்பாளர்களில் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்’ என்பது அவர் மீது வைக்கப்பட்டும் குற்றச்சாட்டு. இருந்தாலும் சிறு தயாரிப்பாளர்களை ஆதரித்து, கை தூக்கி விட்டதை யாரும் மறுக்க முடியாது. ராமநாராயணின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்புதான்!