புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014

முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்; அரசியல் ஆதிக்கங்களுடன் அரங்கேற்றம் 
வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என
வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சிங்கள குடியேற்றங்கள், தமிழர் காணி அபகரிப்பு, சட்டவிரோத கருங்கல் அகழ்வு, மண் அகழ்வு, இராணுவ அழுத்தம் என்று அனைத்து வழிகளிலும் முல்லையில் அநீதிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில் மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தையும் நலிவாக்கி முடக்கும் நடவடிக்கைகள் மாத்தளன் சாலை பேப்பாரப்பிட்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகின்றோம் என்று அரசின் போலியின் பின்னணியில் மக்களின் இயல்பு வாழ்வே சிதைக்கப்பட்டு வருகின்றது. அனைத்து வழிகளிலும் மக்களின் வாழ்வாதார முடக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அரங்கேறிக்கொண்டிருக்கிற நிலையில் அதன் ஒரு கட்டமாகவே மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் அட்டைத்தொழில், சங்கு குளித்தல் போன்றவையும் நடைபெறுகிறது.

மாத்தளன், சாலை, பேப்பாரப்பிட்டி பகுதிகளில் அட்டைத்தொழில் செய்வதற்கான அனுமதிகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பெறப்பட்டு  வெளிமாவட்ட மீனவர்கள் குறித்த பகுதிகளுக்கு சுமார் 300 வள்ளங்களுக்கு மேல் கொண்டுவந்து தொழில் செய்கிறார்கள். இதனையடுத்து எமது பகுதி மீனவர்கள் எனக்கு விடுத்த அழைப்புக்கமைய படகின் மூலம் அந்தந்த இடங்களுக்கு சென்று இத்தொழில் செய்பவர்களையும் அவர்களது அனுமதிப்பத்திரங்களுடன்  தொழிலில் ஈடுபடுவதையும் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

“மீன்பிடி விதிகளை மீறாது அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யுத்தத்தால் முடங்கிய எங்கள் வாழ்வாதாரத்தை கடற்றொழில் மூலம் நிலைபெறச்செய்து கொண்டிருந்த நிலையில் கடலட்டை பிடித்தல் சங்கு குளித்தல் போர்வையில் எம் இடங்களை ஆக்கிரமித்து எம் வாழ்வாதார நெறிகளை சிதைக்கும் நிலை எங்களை மிகவும் பலவீனப்படுத்துகிறது” என்றே முல்லை மீனவர்கள் குமுறுகிறார்கள்.

சட்டதிட்டங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மீனவ சங்கங்களின் ஆலோசனையையும் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும். இத்தொழிலில் 20 கிலோமீற்றருக்கு அப்பால் தான் தொழில் செய்யவேண்டும் என்று அனுமதிப்பத்திரத்தில் இருந்த போதும் மிகக்குறைந்த தூரங்களிலும் இத்தொழில் செய்யப்படுகிறது. இதனை அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதைத்தவிர சில நேரங்களில் சட்டவிரோத தொழில் முறையான வெடிவைத்து மீன்பிடித்தலை செய்கிறார்கள். கணவாய் கூடு வைத்து தொழில் செய்தவதால் மற்றைய மீனவர்களது வலை சேதமடைகிறது. சங்குகள் அகழ்வதன் மூலமாக மீன்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாது நாயாற்றுப்பகுதியில் ஆரம்பத்தில் வந்து தொழில் செய்தவர்கள் எனக்கூறி 38 சிங்கள மீனவர்களுக்கு அனுமதி கொடுத்து அதன் பின் 34 மீனவர்களை அவர்களுடைய வாரிசுகள் என மொத்தம் 72 மீனவ குடும்பங்கள் தொழில் செய்வார்கள் என்ற அனுமதியை வழங்கிவிட்டு இப்போது 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் அத்துமீறி குடியேறி இருக்கிறார்கள். அவர்களால் எமது கடற்கரையில் வெளிச்சம் போட்டு மீன்பிடித்தல், சுருக்குவலை போன்ற சட்டவிரோத தொழில்களும் செய்யப்படுகிறது. இவைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் மீண்டுவரக்கூடிய ஒவ்வொரு வழியும் மூடப்படுவதையே இவ்வாறான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேற்கூறிய தொழில்கள் மூலம் எமது வளங்கள் அழிக்கப்படுவதனால் எமது மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்குகின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், 27 கடற்றொழில் சங்கங்களில் உள்ள சுமார் 4143 மீனவர்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்நிலையில் மென்மேலும் வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதிகள் வழங்கி அவர்கள் சட்டவிரோத தொழில்முறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது முல்லை மாவட்ட மீனவ சமுதாயத்தின் எதிர்கால வாழ்வாதார முன்னேற்றங்களை கேள்விக்குறியாக்குகிறது.எனவே சட்டவிரோத மீனவர் குடியேற்றம் முதல்கொண்டு எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அட்டைத்தொழிலும் சட்டவிரோத தொழில்முறைகளும் நிறுத்தப்படவேண்டும். அதுவே யுத்தத்தால் பாதிக்கபட்ட எம் முல்லை மீனவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேலும் இயலுமான வழிகள் மூலம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீனவ சமுதாயத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் முயற்சிகள் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad