ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பொது எதிரணியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இவர்களில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, ஜனக பண்டார தென்னகோன், ரெஜினோல்ட் குரே, குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. நாவின்ன ஆகியோரும், பிரதியமைச்சர்களான சனத் ஜயசூரிய, லசந்த அலகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிரணியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் வரும் நாட்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் சந்தித்து எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் கட்சி தாவலைத் தொடர்ந்து ஆளுங்கட்சியில் இருந்து பெருந்தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே தடவையில் கட்சிதாவும் முடிவில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் பிரகாரம் கடைசி நேரத்தில் அதாவது 8ம் திகதியை நெருங்கிய நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தன் பரிவாரங்களுடன் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்தும் தனது அமைச்சுப் பதவிக்குரிய வசதிகளைப் பாதுகாத்துக் கொள்வது அவரது நோக்கமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.