புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2015

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்க இணக்கம்; சுதந்திரக் கட்சிக்குள் எட்டப்பட்டது

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. 

100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்யும் வகையில் இந்த தேசிய அரசாங்கத்தை ஆறுமாதங்கள் வரை முன்னெடுத்துச் செல்ல சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.


கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கட்டுநாயக்க மூன் லொட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற  சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


கட்சியின் அரசியல் செயற்பாடுகள் நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்திய தாகவே இருக்கவேண்டு மென்பதால் தற்போதைய நிலையில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்படும் முடிவை சுதந்திரக்கட்சி எடுத்துள்ளது.


எனினும் தேசிய அரசை முன்னெடுப்பதில் சில நிபந்தனைகளை சுதந்திரக் கட்சி முன்வைக்கலாமெனவும் அவை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடும் பொறுப்பை கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


சனிக்கிழமை மாலை மாநாடு ஆரம்பமானபோது தேசிய அரசமைக்கும் யோசனையை ஜனாதிபதி இங்கு முன்வைத்த போது மாநாட்டுக்கு வருகைதந்திருந்த 100 க்கும் மேற்பட்ட கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.


அதேசமயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் திருத்தம் கொண்டுவரவும் அரசியலமைப்புத் திருத்தத்தை துரிதப்படுத்தவும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவராமல் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற யோசனையும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஆராயப்பட்டபோது, 17 ஆவது திருத்தத்தில் எதுவித மாற்றமும் அவசியமில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பாக உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன சுதந்திரக் கட்சியின் எதிர்கால வெற்றிக்கு யதார்த்த ரீதியில் சிந்தித்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சுலோகங்களை முன்வைக்க வேண்டுமே தவிர குரோதத்தனமான கோஷங்கள் கட்சியில் நுழைய இடமளிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சுதந்திரக்கட்சி மாற்றம் அடையவேண்டுமென்ற செய்தியை வெளிக்காட்டியுள்ளனர். இந்த மாற்றத்தின் பக்கம் நாம் பயணிக்கத்தவறினால் அடுத்த 10 15 வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் நிலையே ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனிப்பட்ட உடன்படிக்கை எதுவும் தம்மால் செய்து கொள்ளப்படவில்லை எனவும் நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினருடனும் இணங்கி செயற்படும் முடிவை எடுத்ததாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.


கசப்பாக இருந்தாலும் உண்மையை சொல்லியாக வேண்டியுள்ளதாகவும் சுதந்திரக்கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இது போன்ற முடிவை தம்மால் எடுக்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

ad

ad